சென்னை: 'வெளிநாடுகளில் தெரு நாய்கள் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது; என்ன தீர்வு காணப்பட்டு உள்ளது என்பதை தெரிந்து, அதை நம் நாட்டில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தெரு நாய்கள் பிரச்னை தொடர்பாக, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் தாக்கல் செய்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் மற்றும் மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஏ.அருண்பாபு ஆகியோர் ஆஜராகி, 'தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக, நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. தெரு நாய்கள் வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என்றனர். இதையடுத்து நீதிபதிகள், 'தெருக்களில் பிடிக்கப்பட்டு, இனப்பெருக்க கட்டுப்பாடு செய்து, அதே பகுதிகளில் விடும்பட்சத்தில், ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்க போகிறீர்கள்' என, அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு பிளீடர், தனி காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், 'அப்படி காப்பகங்கள் அமைக்கப்பட்டால், அவற்றுக்கு உணவளிக்க செல்ல யாருக்கு தைரியம் உள்ளது; அதுபோன்ற நாய்களை கையாள வேறு நடவடிக்கைகளை எடுத்தால், மிருகவதை சட்டத்தை சுட்டிக்காட்டி, தொண்டு நிறுவனங்கள் வழக்குகள் தாக்கல் செய்யும். 'அதனால், வெளிநாடுகளில் தெரு நாய்கள் பிரச்னை எவ்வாறு கையாளப்படுகிறது; என்ன தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை தெரிந்து, அதை நம் நாட்டில் பின்பற்றலாம்' என, யோசனை தெரிவித்தனர்.