உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வகுப்புக்கு செல்லாத ஹெச்.எம்.,கள்; மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு

வகுப்புக்கு செல்லாத ஹெச்.எம்.,கள்; மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பாடம் நடத்தாததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகிஉள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: தமிழக கல்வி விதிகளின்படி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒரு வாரத்துக்கு 10 பாட வேளைகளையும், உதவி தலைமை ஆசிரியர்கள், 20 பாட வேளைகளையும் கையாள வேண்டும். அத்துடன், மற்ற ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்துகின்றனரா என, மாதத்துக்கு தலா, 20 பாட வேளைகளை கண்காணித்து, மொபைல் செயலியில் பதிவிட வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கு வாரம் 28 பாட வேளைகளை ஒதுக்க வேண்டும். அதேசமயம், அரசு வழங்கியுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான கையேட்டில், உதவி தலைமை ஆசிரியருக்கு வாரம் , 14 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும். மற்ற பாட வேளைகளில் தலைமை ஆசிரியருடன் இணைந்து, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது, கல்வி விதிகளில், 20 பாட வேளைகள் என்றும், தலைமை ஆசிரியர்களுக்கான கையேட்டில், 14 பாட வேளைகள் என்றும் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சில உதவி தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் கையேட்டை மேற்கோள் காட்டி, தலைமை ஆசிரியர்கள், 10 பாட வேளைகளை கையாண்டால் மட்டுமே , தங்களால், 14 பாட வேளைகளை கவனிக்க முடியும் என்று கறாராக கூறி விடுகின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர், அலுவலக பணிகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பாட வேளையில் பாடம் நடத்துவது சிரமமாக உள்ளது. அதேநேரம், அந்த பாடங்களுக்கு வேறு ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவர்களின் விகிதத்துக்கு ஏற்ப, கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jagadeesan R
ஜூன் 10, 2026 00:08

நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். நீங்கள் சொல்வதெல்லாம் பழைய காலங்களில் நடந்து இருக்கலாம். நான் ஓய்வு பெறும் வரை நீங்கள் சொல்கிற நிகழ்வுகளை எல்லாம் மிக அரிதாகவே கண்டிருக்கிறேன். தேர்ச்சி விகிதம் குறைந்தால் மற்ற ஆசிரியர்கள் முன் அந்த ஆசிரியர் எப்படி குற்ற உணர்ச்சியால் தலை குனிய வேண்டியிருக்கும் என்பதை நேரில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். எனவே எந்த ஆசிரியரும் முடிந்த வரை கற்றுத்தரத்தான் பார்ப்பார்கள்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 08, 2026 08:03

நிறைய ஆசிரியர் ட்யூஷன் சென்டர் வைத்துள்ளனர். அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.


D.Ambujavalli
ஜூன் 08, 2026 06:48

இருக்கும். ஆசிரியர்கள். தங்கள். வேலை. நேரத்தில். ‘உப. தொழில்களுக்கு’. சென்றுவிட்டு, அவைகளுக்கே நேரம். ஒதுக்குவது. நிறுத்தப்பட்டாலே. பாடம். நடத்த. ஒதுக்கப்பட்ட. Period களில் ஒழுங்காக. வருகை. தந்தாலே. போதும்


புதிய வீடியோ