உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்காண்டு தொழில் முதலீடுகள் எவ்வளவு? அரசு நேரடி பதில் தர வேலுமணி வலியுறுத்தல்

நான்காண்டு தொழில் முதலீடுகள் எவ்வளவு? அரசு நேரடி பதில் தர வேலுமணி வலியுறுத்தல்

சென்னை:'கடந்த நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் எவ்வளவு என்பதற்கு, தொழில் துறை அமைச்சர் நேரடி பதில் தர வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, கடந்த பல ஆண்டுகளாக, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. 1960ம் ஆண்டு முதலே தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தின் பங்களிப்பு சில ஆண்டுகள் தவிர, மற்ற ஆண்டுகளில், 8 முதல் 9 சதவீதமாகவே இருந்து வருகிறது. ஆனால், தொழில் துறை அமைச்சர் ராஜா, கடந்த 26ல் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தை இரண்டாம் இடத்திற்கு தி.மு.க., அரசுதான் கொண்டு வந்ததுபோல் கூறுகிறார். 1960- - 61ல் 8.7 சதவீதமாக இருந்த பங்களிப்பை, 2023- - 24-ல் 8.9 சதவீதமாக உயர்த்தியது, தி.மு.க.,வின் பெரும் சாதனை என்று, அவர் கூறுகிறார். அதன்படி, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையில், இந்திய உற்பத்தி மதிப்பில், தமிழகத்தின் பங்களிப்பு, அ.தி.மு.க., ஆட்சியில், 2020- - 21ல் 8.9 சதவீதமாக இருந்தது என கூறியுள்ளது. மத்திய தணிக்கை குழு அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த 2023- - 24ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் முதற்கட்ட மதிப்பீடுதான். இறுதி மதிப்பீட்டில் இந்த புள்ளிவிவரம் மாறலாம். எனவே, 2020 - -21 அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த, அதே 8.90 சதவீத அளவிலேயே இந்த பங்களிப்பு உள்ளது. நிலைமை இப்படி இருக்க, தி.மு.க., ஆட்சியில் சாதனை செய்து விட்டதாக, அமைச்சர் கூறுவது விந்தையாக உள்ளது. வெற்று அறிக்கை வெளியிட்டு வரும் தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தை, குஜராத், உத்தரப் பிரதேசம் பின்னுக்குத் தள்ளி விட்டதுதான் உண்மை. அமைச்சரின் பதிலை பார்ககும்போது, சட்டியில் இருந்தால் தானே, அகப்பையில் வரும் என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில்கள் வாயிலாக, தமிழகத்திற்கு 10.07 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்று, அமைச்சர் குறிப்பிடுவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. பிற மாநிலங்களைப்போல, டாவோஸ் நகரில் தமிழகம் ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பதற்கு பதில் இல்லை.மேலும், 19.17 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு, 31.53 லட்சம் பேருக்கு மொத்த வேலை வாய்ப்பு என, அமைச்சர் கூறுவது கற்பனையான விபரம்தான். உண்மையான முதலீடு எவ்வளவு என்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. தொழிற்சாலைகள் வாரியாக விபரங்கள் தரப்படவில்லை. தமிழகத்தில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கத்தின் தாக்கம் இதுவரை தென்படவில்லை. மொத்தத்தில் இந்த புள்ளிவிவரம் ஒரு ஏட்டு சுரைக்காய்தான்.கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணங்கள், டாவோஸ் உலக பொருளாதார மாநாடு ஆகியவற்றில், எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன, அதில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்ற பழனிசாமி கேள்விகளுக்கு நேரடியான பதிலை அமைச்சர் அளித்தால் நல்லது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை