ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கு: அச்சு தாக்கல் செய்த மனு தள்ளுபடி
கொச்சி : கேரளாவில் ஐஸ்கிரீம் பார்லர் என்ற பெயரில், விபசாரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சரின் தலையீடு உள்ளதால் இந்த வழக்கை சி.பி.ஐ.,விசாரணை நடத்த உத்தரவிடுமாறு, முன்னாள் முதல்வரும், தற்போது, சட்டசபை எதிர்க் கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.கேரள மாநிலம், கோழிக்கோட்டில் தனியார் ஐஸ்கிரீம் பார்லர் என்ற பெயரில், விபசாரம் மற்றும் பெண்களை விற்பனை செய்வதாக, 1990ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்து, மாநில தனிப்படை போலீசார், விசாரணை நடத்தினர். ஆனால், புகாருக்கான போதுமான ஆதாரங்கள், சாட்சிகள் கிடைக்காமல் போலீசார் திணறினர். இவ்வழக்கில், 21 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் குஞ்சாலகுட்டியின் தலையீடு இருப்பதாக கூறியும், சி.பி.ஐ. விசாரணை கோரியும், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மனு தாக்கல் செய்தார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் கே.பி. தண்டபாணி ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், வழக்கின் விசாரணையை 90 நாட்களுக்கு முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்படும் என்பதால் மேல் மனு விசாரிக்க தேவையில்லலை என்றார். நீதிபதிகள், செல்லமேஸ்வரர், பி.ஆர். ராமச்சந்திர மேனன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை நடப்பதால் மேல்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் .இந்த வழக்கினை டிசம்பர் 22-ம் தேதி ஒத்தி வைத்தனர்.