உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ஐ.சி.எப்., முடிவு

சிலீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க ஐ.சி.எப்., முடிவு

சென்னை: ஐ.சி.எப்., ஆலையில், இருக்கை வசதி உடைய, வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, 'சிலீப்பர்' வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க, ஐ.சி.எப்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.சென்னை ஐ.சி.எப்., எனப்படும், ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில, வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில்கள், பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை, 77 வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - மைசூர், கோவை, எழும்பூர் - திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களிலும், பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் இருக்கை வசதி உடையவை. அதனால், இரவுநேர ரயில்களாக இயக்க முடியவில்லை.இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயில்களுக்கு, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட துாரம் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயில், விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இனி, சிலீப்பர் ரயில்களின் தயாரிப்பை அதிகரிக்க உள்ளோம். இருக்கை வசதி உடைய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு, படிப்படியாக குறைக்கப்படும். ஏனெனில், அதற்கான தேவை தற்போது போதுமானதாக இருக்கிறது. சிலீப்பர் வந்தே பாரத் ரயில்களின் தேவை அதிகமாக உள்ளது.பல்வேறு ரயில்வே மண்டலங்களிலும், சிலீப்பர் ரயில்கள் இயக்குவதற்கான பட்டியல், ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்படுகிறது. 16 பெட்டிகள், 24 பெட்டிகள் என இரண்டு வகையான, சிலீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் வகை ரயில்களை, ரயில்வேயின், இதர தொழிற்சாலைகளிலும் தயாரிக்க கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சண்முகம்
மார் 19, 2025 10:31

அதே பழைய வடிவமைப்பில் கலர் கலரான பிளாஸ்டிக்குடன் புதிய தூங்கும் வசதி வந்தது பாரத்.


अप्पावी
மார் 19, 2025 07:46

மக்களிடம் குறைகளைக் கேக்காம தயாரிச்சு தள்ளுங்க. காலை 9:50 க்கு திருச்சில வண்டி ஏறினா ரயிலில் எக்கச் சக்கத்துக்கு ஏ.சி யை போட்டு மநுசனுக்கு உடம்பு விரைச்சு போயிடுது. வயதானவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம்.வைகை, பல்கவன் ரயில்களிலும் இதே கதைதான். அடுத்து ராக்போர்ட் வண்டி தை ராத்திரி 11.15 க்கு எடுத்து விடிகாலை 3 மணிக்கெல்லாம் கொண்டாந்து தள்ளிடறாங்க. ஏறும் போதும், இறங்கும் போதும் தூக்கம்.கிடையாது. ஆட்டோக்காரங்க இஷ்டத்துக்கு காசு புடுங்கறாங்க. ராத்திரில ஸ்பீடா ஒட்டி கெத்து காமிக்கறாங்ளாம். அதுக்கு பதிலா ஒரு பாசஞ்சர் ரயில் ராத்திரி 9 மணிக்கு எடுத்து காலை 5 மணிக்கு போய் சேரலாம். ஜனங்களும் தூங்குவாங்க. வண்டியில் பஜ்ஜி, கட்லெட் கொண்டாரவங்க அப்படியே திறந்த படி கண்டு வந்து விக்கிறதும், கண்ட இடத்தில் கையை வெச்சுட்டு அதே கையால் பஜ்ஜியை எடுத்து குடுக்கறதும் சகிக்கலை. எல்லா கோச்சிலேயும் டாய்லெட்டில் மூத்திரநாத்தம். இதையெல்லாம் கெவுனிக்காம ஸ்லீப்பர் உடறாங்களாம். இதெல்லாம் ஐ.ஏ.எஸ் தத்திகளுக்கு எங்கே புரியப் போகுது?


guna
மார் 19, 2025 16:43

சரி சரி....எவளோ பஜ்ஜி வாங்கி சாப்பிட்டே கோவாலா....காசு குடுதியா


CBE CTZN
மார் 19, 2025 07:26

தற்போது இயக்கப்பட்டு வரும் சாதாரண ரயில்களில் மக்கள் இருக்கை கிடைக்காமல் காத்திருப்பு எண்ணிக்கை நூறு இருநூறை தாண்டி செல்கிறது, நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் பயன் பெறும் வகையில் கட்டமைப்பு அதிகரிக்க வேண்டாமா... அதற்கான தேவை நீங்கள் சொல்லும் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தேவையை விட அதிகம் என்பதை மறுக்க முடியுமா...


புதிய வீடியோ