காலையில் ஆசிரியர் போராட்டம் மாலையில் வந்தது சம்பளம்
சென்னை:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்திற்கு, 2,165 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்காததை கண்டித்து, அனைத்து ஆசிரியர் சங்கங்கள், அமைச்சு பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி, மாநில அரசு, சம்பளத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்கும் என்று சொன்னார்; அதற்கேற்றவாறு, நேற்று இரவே, ஆசிரியர்கள், செப்டம்பர் மாத சம்பளம் பெற்றனர்.போராட்டத்தில் கலந்து கொண்ட, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:நாட்டில் கல்வி, ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. அதாவது, மாநில, மத்திய அரசுகள், தங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப இசைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அதன் விதி. ஆனால், மத்திய அரசு, தமிழக அரசின் கருத்தை கேட்பதுபோல் கேட்டுவிட்டு, மும்மொழி கொள்கையை திணிக்க பிடிவாதமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேசியதாவது:புதிய கல்வி கொள்கையின் நல்ல அம்சங் களை நாம் ஏற்றுக்கொண்ட போதும், ஹிந்தியை திணிக்க நினைக்கின்றனர். அப்படி நினைத்தால், மீண்டும் 1965 திரும்பும்.இவ்வாறு அவர் பேசினார்.மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''தமிழகத்தில் இருமொழி கொள்கை உள்ளது. அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். வெறும் 2,000 கோடி ரூபாய் பணத்துக்காக, நாம் ஹிந்தியை ஏற்றால், நம் சந்ததி நம்மை மன்னிக்காது,'' என்றார்.ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:மத்திய அரசு, இந்தாண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, 2,165 கோடி ரூபாய் நிதியை வழங்காததால், கடந்த ஏப்., முதல் தமிழக அரசே ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி வந்தது. இந்த மாதம் வழங்க முடியாத நிலையை, மத்திய அரசிடம் தெரிவித்தோம். இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனாலும், மாநில அரசு இன்றே 100 கோடி ரூபாயை விடுவிக்கும். தி.மு.க., அரசு வாக்குறுதியை நிறைவேற்றும் அரசு; காற்றில் பறக்க விடாது.இவ்வாறு பேசினார்.அதன்படி நேற்று மாலையே, ஆசிரியர்களுக்கான சம்பளம் விடுவிக்கப்பட்டது; அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.