உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒப்பந்த காலம் நீட்டிப்புக்கு ஐ.ஓ.சி., சம்மதம் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்

ஒப்பந்த காலம் நீட்டிப்புக்கு ஐ.ஓ.சி., சம்மதம் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை:எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை, தற்காலிகமாக அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 'ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்ட காலத்தில், எந்தவித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது' என, டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரிக்கைகள் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் லாரிகள் வாயிலாக, எல்.பி.ஜி., எரிவாயு வினியோகம் செய்து வருகின்றன. இந்த டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து, புதிய ஒப்பந்தங்களை வழங்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், 'டெண்டர்' கோரி உள்ளன. இந்த டெண்டர் நடைமுறைகள் முடிந்து, பணிகள் ஒதுக்கும் வரை, தற்போதைய ஒப்பந்தங்கள், அடுத்தாண்டு பிப்ரவரி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், பெரும் தொகை முதலீடு செய்துள்ள டேங்கர் லாரிகளை, வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது என்பதால், ஒப்பந்த காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி, மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள், நீதிபதி எம்.தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தன. அப்போது, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''புதிய டெண்டர் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. எனவே, தற்போதைய ஒப்பந்தத்தை, அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க தயாராக உள்ளோம். ''இந்த இடைப் பட்ட காலத்தில் புதிய டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்படும்,'' என்றார். எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் அளித்த ஒப்புதலை, டேங்கர் லாரி சங்கங்களும் ஏற்றுக்கொண்டன. முடித்து வைப்பு இதை பதிவு செய்த நீதி பதி, தற்போதைய ஒப்பந் தத்தை, அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்கவும், இடைப்பட்ட காலத்தில், எந்த வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது எனவும், டேங்கர் லாரிகள் சங்கத்துக்கு உத்தரவிட்டு, மனுக்களை முடித்து வைத்தார். இது குறித்து நாமக்கல்லில், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறுகையில், ''எண்ணெய் நிறுவனங்கள், எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளதால், வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. ''இனி, காஸ் டேங்கர் லாரிகள் வழக்கம்போல் ஓடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை