உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு வசதி வாரியம் விடுவிக்க உள்ள நிலங்களுக்கு என்.ஓ.சி., தேவையா? விபரம் தெரியாமல் விண்ணப்பிக்கும் மக்கள்

வீட்டு வசதி வாரியம் விடுவிக்க உள்ள நிலங்களுக்கு என்.ஓ.சி., தேவையா? விபரம் தெரியாமல் விண்ணப்பிக்கும் மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பயன்படுத்தாத நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ள நிலையில், அது குறித்த புரிதல் இன்றி, பொது மக்கள் தடையின்மை சான்றிதழ் கோரி தொடர்ந்து விண்ணப்பிப்பதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் வீட்டுவசதி வாரிய திட்டங்களுக் காக கையகப்படுத்திய கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட வகையில், 10,047 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதில் கையகப்படுத்துவதற்கான முதல்கட்ட 'நோட்டீஸ்' வழங்கப்பட்ட நிலங்கள், தனியார் பயன்பாட்டில் உள்ளன.

வங்கி கடன்

இத்தகைய நிலங்களில் வீடு கட்டியவர்கள், அதை விற்க முடியாமல் தவிக்கின்றனர். வீட்டுவசதி வாரியத்தின் நோட்டீஸ் இருப்பதால், இந்த நிலங்களில் கட்டுமான திட்ட அனுமதி, வங்கிக்கடன் போன்ற வசதிகளை பெற, வாரியத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக, வாரியத்தின் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர். பல இடங்களில், அதிகாரிகள் கூடுதல் தொகை கேட்பதாகவும், சில இடங்களில் போலி சான்றிதழ்கள் புழங்குவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை விடுவிக்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. இதன்படி, 10,047 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை வாரியம் துவக்கி உள்ளது. இருப்பினும், புதிதாக வீடு கட்டுவோர், வங்கிக்கடன் பெறுவோர், வாரியத்தின் கோட்ட அலுவலகங்களில் தடையின்மை சான்றிதழுக்காக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை பெறும் வாரியத்தின் கோட்ட அலுவலக அதிகாரிகள், பொது மக்களை அலைய விடுவதாக புகார் எழுந்துள்ளது.

அவசரப்பட வேண்டாம்

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: பயன்படுத்தாத நிலங்களை விடுவிப்பதற்கான பணிகள் நடந்து வந்தாலும், சில விஷயங்களில், தடையின்மை சான்றிதழ் தேவைப்படுகிறது. இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வராததால் விண்ணப்பிக்கிறோம். இந்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தெளிவாக கூறாமல், அதிகாரிகள் அலைய விடுகின்றனர். இந்த விஷயத்தில், தெளிவான அறிவிப்பை வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பயன்படுத்தாத நிலங்கள் விஷயத்தில், முதல்கட்ட நோட்டீஸ் அளிக்கப்பட்ட 5,910 ஏக்கரில், 3,710 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய நிலங்களை விடுவிப்பதற்கான அரசாணைகள், மாவட்டம் மற்றும் கோட்ட வாரியாக வெளியிடப்படும். 'சர்வே' எண் வாரியாக ஒவ்வொரு நிலம் குறித்தும் ஆய்வு செய்து, இதற்கான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்பணிகள் முடியும் வரை, பொது மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.ஓரிரு மாதங்கள் ஆனாலும், நிலங்களை விடுவிக்கும் ஆணை வரும் வரை பொறுமை காக்க வேண்டும். இது தொடர்பான நிலவரத்தை பொது மக்களுக்கு விவரிக்க, கோட்ட அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி