விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த, 57பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து விசாரித்ததில், அவர்,புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் கள்ளச்சாராயத்திற்கு தேவையான வேதிப்பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மாதேஷை போலீசார் கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=idjwp855&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரிடம் நடத்திய விசாரணையில், கடலுார் மாவட்டம் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில், செராமிக்கம்பெனி நடத்தி வரும்,எஜமான் நகர் ஜோதிமணி, 39, வீரபாண்டியன் தெருவை சேர்ந்தகேசவகுமார், 39, ஆகியோருக்கும், சட்டவிரோதமாக எம்.டி.ஓ., மற்றும் ஓலிக் ஆயில் விற்பனை செய்ததாக தெரிவித்தார்.இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீசார், ஜோதிமணி, கேசவகுமார் இருவரையும் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். இருவரும், மாதேஷிடம் சட்ட விரோதமாக ஆயில் வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.
இருவரும் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழில் செய்வதற்காக ஆயில் வாங்கி உள்ளனர். ஆனால், அதை ஜி.எஸ்.டி., கட்டாமல் முறைகேடாக வாங்கியது, போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.மார்ச் முதல் தற்போது வரை 25 பேரல்கள் கொள்முதல் செய்துள்ளனர். இதையடுத்து, ஜோதிமணி, கேசவகுமார் இருவரையும் விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக ஆயில் வாங்கியதாக அவர்கள் மீது விருத்தாசலம் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 320 லிட்டர் எம்.டி.ஓ., ஆயிலை பறிமுதல் செய்ததுடன், அவர்களிடம் இந்த வேதிப்பொருள் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு விற்கப்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, கள்ளச்சாராயம் மரணங்கள் எதிரொலியாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதில், காவல் துறையினருக்கு மட்டுமின்றி, வருவாய் துறையினருக்கும் பங்கு உண்டு. அவர்கள், டாஸ்மாக் அருகே அனுமதியின்றி செயல்படும் பார்கள், டாஸ்மாக் மது விற்பனை விபரங்கள், கள்ளச்சாராயம் விற்பனை பாதிப்புகள் போன்ற குற்ற செயல்கள் தொடர்பான தகவல்களை வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் வாயிலாக சேகரித்து, மாதம் தோறும் கலெக்டரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.இதன் வாயிலாக கலெக்டர் தலைமையில் நடக்கும் மாவட்ட சட்டம் - ஒழுங்கு தொடர்பான அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து காவல் துறை அதிகாரிகளை எச்சரித்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வருவாய் துறையின் கலால் அதிகாரிகள், அலுவலர்கள் முன்கூட்டியே எவ்வித தகவலும் அளிக்காமல் கோட்டை விட்டனர். இந்த விவகாரத்தில், காவல் துறையினர் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.தற்போது மாவட்ட கலால் உதவி ஆணையர் சக்திவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஆணையர் ஜெயகாந்தன் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உடலை தோண்டி பரிசோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன், 45. கடந்த 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து இறந்தார். இதையறியாத அவரது உறவினர்கள், ஜெயமுருகன் உடலை அடக்கம் செய்தனர். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கியதை அடுத்து, 'ஜெயமுருகனும் சாராயம் குடித்து தான் இறந்தார். அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, மாவட்ட நிர்வாகத்திற்கு உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கள்ளக்குறிச்சி தாசில்தார் கமலக்கண்ணன் மற்றும் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், நேற்று காலை மாதவச்சேரி மயானத்தில் புதைக்கப்பட்ட ஜெயமுருகனின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் 1,500 லிட்டர் மெத்தனால் பறிமுதல்
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதாக, மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.மாதவரம், வடபெரும்பாக்கம், மணலி, அம்பத்துார் தொழிற்பேட்டை, திருவேற்காடு, கும்மிடிப்பூண்டி 'சிப்காட்' வளாகம் ஆகியவற்றில் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில், மதுவிலக்கு போலீசார் மூன்று நாட்களாக ஆய்வு நடத்தினர். இதில், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், கன்னியம்மன் நகரில் செயல்படும், 'ஸ்ரீ செம்' என்ற தனியார் தொழிற்சாலையில், 1,500 லிட்டர் ரசாயன கலவையில் மெத்தனால் கலந்திருப்பது, நேற்று முன்தினம் போலீசாருக்கு தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார், கொருக்குப்பேட்டையை சேர்ந்த கவுதம், 50, மாதவரம் பன்சிலால், 32, திருவண்ணாமலை மாவட்டம், மலையனுார் பரமசிவம், 36, ராம்குமார், 33, ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். மெத்தனால் எங்கிருந்து வாங்கப்பட்டது; மாதம் தோறும் எவ்வளவு வாங்கப்படுகிறது. எவ்வளவு இருப்பு வைக்கப்படுகிறது உள்ளிட்ட விபரங்கள் குறித்து, அவர்களிடம் விசாரணை நடக்கிறது.மதுவிலக்கு போலீசார் கூறுகையில், 'ரசாயன கலவையில் மெத்தனால் கலந்து பழைய பெயின்ட் மற்றும் துருப்பிடித்த இரும்பு பொருட்களின் கரை அகற்றவும், வார்னிஷ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எனினும், முறையான அனுமதியுடன், மெத்தனால் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், பிடிபட்டோரிடம் விசாரிக்கப்படுகிறது' என்றனர்.இதற்கிடையே, ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட, 10க்கும் மேற்பட்டோரை திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.