உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது புதுச்சேரியில் சி.பி.ஐ., அதிரடி

ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது புதுச்சேரியில் சி.பி.ஐ., அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: தனியார் நிறுவனத்திற்கு ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய உதவி தொழிலாளர் ஆணையரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ஜெயா நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வளாகத்தில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, உதவி தொழிலாளர் ஆணையராக பணியாற்றி வரும் ரமேஷ்குமார், 32; தனியார் நிறுவனங்கள் ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ.,க்கு புகார் சென்றது.அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், புகார் உண்மை என தெரியவந்தது. அதன்பேரில் சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி., சேதுமாதவன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் முகாமிட்டு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.நேற்று மதியம் 1:00 மணியளவில் பைக்கில் வந்த நபர், உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமாரிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சி.பி.ஐ., குழுவினர், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.பின்னர் இருவரையும் தனித்தனியே வைத்து விசாரித்தனர். தேனியை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக உரிமம் கோரி, புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. மனுவை ஆய்வு செய்த உதவி ஆணையர் ரமேஷ்குமார், ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக 1 லட்சம் ரூபாய் கேட்டார்.அந்த நிறுவனம், புதுச்சேரி தேங்காய் திட்டை சேர்ந்த இளங்கோ என்பவர் மூலம் பணத்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகள், அதே ஜெயா நகர் 4வது குறுக்கு தெருவில் உள்ள உதவி ஆணையர் ரமேஷ்குமார் வீட்டில் மூன்று மணி நேரம் சோதனை நடத்தினர்.கைது செய்யப்பட்ட இருவரிடமும் டி.எஸ்.பி., சேதுமாதவன் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இளங்கோவின் மனைவி மற்றும் மகனையும் வரவழைத்து விசாரித்தனர். இந்த விசாரணை இரவு 11:00 மணிக்கு மேலும் நீடித்தது.

வழி கேட்டவர் சி.பி.ஐ.,யில் சிக்கினார்

கைதான இளங்கோ பணம் கொடுக்க பைக்கில் நேற்று மதியம் ஜெயா நகருக்கு வந்துள்ளார். ஆனால், மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல், அதே நகரில் பைக்கில், சுற்றி சுற்றி வந்துள்ளார். அப்போது, அலுவலகத்திற்கு செல்லும் வழியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.பி.ஐ., போலீஸ்காரிடம், வழி கேட்டு உதவி ஆணையர் அலுவலகம் சென்றது குறிப்பிடத்தக்கது.

வரி வசூலருக்கு காப்பு

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் வீட்டுமனை அங்கீகாரம் பெற, சரவணம்பட்டி ஆனந்தவேல் அணுகினார். அவரிடம், வரி வசூலர் சதீஷ்குமார், 40, என்பவர், 40,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் .தர விரும்பாத ஆனந்தவேல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய, பணத்தை நேற்று மாலை சதீஷ்குமாரிடம், ஆனந்தவேல் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சதீஷ்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

என்றும் இந்தியன்
ஆக 22, 2025 17:35

இதுக்குத்தான் மறுபடி மறுபடி இவர்களை நான் சொல்வது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஊழல் சேர்க்கும் சங்கம் என்று ஆரம்பியுங்கள் அதற்குள் முதல்வர் முதல் அதில் ஈடுபட்டோர் சங்கம் என்று வைத்தால் உங்களுக்கு கிடைக்கும் ஊழல் தொகையில் ஒரு சிறந்த பங்கு கிடைக்கும், போலீஸ் உங்களை கைது செய்யவே செய்யாது.


Padmasridharan
ஆக 22, 2025 11:33

தைரியமாக புகார் செய்தவர்களுக்கு வாழ்த்துகள். அதிகார பிச்சைக்காரர்கள் இவ்வாறு செய்யும்போது குடும்ப நபர்களுக்கு பாவத்தை சேர்த்து வைக்கின்றனர். படிக்காத கிராம மக்களுக்கு இருக்கிற, அநியாயத்தை எதிர்க்கிற தைர்யம் நகரத்தில் படித்த பலருக்குமில்லை


SANKAR
ஆக 22, 2025 10:15

this is funny. a PERMISSION to be obtained from a Central Govt department for giving employment! such rules must be scrapped


VSMani
ஆக 22, 2025 10:03

வாங்குகிற சம்பளம் சாப்பாட்டுக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் பெற்றோர்களின் மருத்துவ செலவுக்கும் பத்தவில்லை. பின்னர் என்ன பண்றது? அரசு தரமான கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியமானவற்றை இலவசமாக கொடுத்தால் யார் லஞ்சம் வாங்குவார்கள்? கல்வி மருத்துவம் அதிக விலையில் விற்பனை. எனவேதான் லஞ்சம் வாங்குவதற்கு தள்ளப்படுகிறார்கள். லஞ்சம் வாங்கி அதில் பைக், கார், நகை, இடம், வீடு வாங்கும்போது கிடைக்கும் சந்தோசமே தனி மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவதிலும் தனி திறமை வேண்டும். இதற்கு சைக்காலஜி படித்திருந்தால் லஞ்சம் தந்து மாட்டிவிடுகிறவனின் மனதை எளிதில் புரிந்துகொண்டு அவனிடம் தான் ஒரு நேர்மையான அதிகாரிபோல் காட்டிக்கொண்டு லஞ்சம் தர வருகிறவனையே மாட்டிவிட்டு கோர்ட்டுக்கு இழுத்துடலாம்.


Ravi
ஆக 22, 2025 09:47

தமிழ்நாட்டில் சிபிஐ எந்த கேசும் போட விடாமல் GST, INCOMETAX போன்ற மத்திய அரசு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்க வைத்து பாதுகாக்கும் ஸ்டாலின் மாதிரி அரசு