உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கே.என்.நேருவை ஆக., 5 வரை கைது செய்யக்கூடாது: ஐகோர்ட்

கே.என்.நேருவை ஆக., 5 வரை கைது செய்யக்கூடாது: ஐகோர்ட்

மதுரை : திருச்சி ஓட்டல் காஞ்சனாவை அபகரிக்க முயன்ற வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி துணை மேயர் அன்பழகன் உட்பட ஐந்து பேரை, ஆக., 5 வரை கைது செய்யக் கூடாது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நாமக்கல்லைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்வேல். இவர், திருச்சி காஞ்சனா ஓட்டல் நிர்வாகத்தில் இருந்து தன்னை வெளியேற்ற, சிலர் தூண்டுதல் பேரில், குருசங்கரநாராயணன் உட்பட சிலர் முயன்றதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

இப்புகாரின் பேரில், போலீசார் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமின் கோரி, கே.என்.நேரு, அன்பழகன், குருசங்கரநாராயணன், ரங்கநாதன் உட்பட ஐந்து பேர், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தனர். அவர்களை கைது செய்யக் கூடாது என, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது.

நேற்று, முன்ஜாமின் மனு, நீதிபதி ஆர்.மாலா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ராமர், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கேட்டார். அதை ஏற்று, மனு மீதான விசாரணையை ஆக., 5க்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை மனுதாரர்களை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !