உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா புவிசார் குறியீடுக்காக காத்திருப்பு

மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா புவிசார் குறியீடுக்காக காத்திருப்பு

சென்னை: மதுரையின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக மாறியுள்ள ஜிகர்தண்டாவுக்கு, புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையமும், மதுரை ஜிகர்தண்டா சங்கமும் இணைந்து, மதுரை காமராஜர் பல்கலை காப்புரிமை மன்றத்தின் சார்பில், மதுரை ஜிகர்தண்டாவுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது:

தஞ்சாவூர் வீணை, திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது மதுரையின் உணவுகளில் பிரசித்தி பெற்ற ஜிகர்தண்டாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் . மதுரை, கிழக்கு மாரட் சாலை அருகே, ஷேக்மீரான் என்பவரால், 1977ல், தள்ளுவண்டி கடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுதும் பரவலாகி உள்ளது. ஆனாலும், மதுரையில் அவரின் வாரிசுகளால் நடத்தப்படும் கடைகளில், 'கிரீம்' உள்ளிட்டவை பிரத்யேக சுவையுடன் உள்ளன. இதற்கான கொழுப்புச்சத்து நிறைந்த பால், எழுமலை, அலங்காநல்லுார் உள்ளிட்ட இடங்களில் பெறப்படுகிறது. இந்த பாரம்பரிய உணவுக்கு புவிசார் குறியீடு பெற, கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில், மும்பையில் உள்ள அதிகாரிகள், இதன் சுவை, தரம், தயாரிப்பு முறைகளை ஆராய்ந்து சான்றிதழ் வழங்குவர். அதன்பின், அந்த உணவுப்பொருளுக்கான தரமதிப்பும், வணிகமும் பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
அக் 07, 2025 16:01

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கட்டாயம் தேவை....


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 07, 2025 09:13

இம்பீரியல் சினிமா எதிரில் ஜிகர்தண்டாவுக்கு, அண்ணே சீக்கிரம் கொடுங்கண்ணே படம் போட்டுருவாங்கண்ணே என்று அவசரப்படுத்தி அருந்திய சுவை இன்னமும் மறக்கவில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 07, 2025 07:24

1977க்கு முன்பிருந்தே தெற்குமாசி வீதி - நவபத்கானா கோர்ட்டு தெரு சந்திப்பில் சவராஷ்டிரா பெண்கள் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. அந்த பள்ளிக்கு அருகில் தெரு முனையில் தான் பாய் ஜிகர்தண்டா கடை வைத்திருந்தார். அந்த ஏரியாவில் வசிக்கும் பெருசுகளிடம் கேட்டால் கரெக்ட் என்பார்கள். அதே காலகட்டத்தில் தெற்குமாசி வீதி - மால் வடம்போக்கித் தெரு சந்திப்பில், அதாவது விளக்குத்தூண் அருகில் பாண்டி என்பவர் மாங்காய், தென்னங்குருத்து விற்பார். அவை எல்லாமே மாலைவேளையில் தான். கால் டீ ஸ்பூன் வறுத்த கடுகை செரட்டையில் போட்டு, ஒரு ஸ்பூனை வைத்து சரசர வென்று பொடித்து, அதில் கொஞ்சம் உப்பு, மிளகாய் பொடி போட்டு ஒரு கலக்கு, அப்புறம் ஒரு கீற்று மாங்காயை அரை சென்டிமீட்டர் க்யூப்களாக வெட்டிப் போட்டு சரக், சரக், சரக் என்று இன்னொரு கலக்கு. சின்ன தினசரி பத்திரிக்கை காகிதத்துண்டில் கொட்டி கொடுப்பார், பாண்டி அண்ணன். 3 பைசா என்று நினைக்கிறேன். கடுகு மணத்துடன் மாங்காயின் சுவை, இன்று நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது. பாண்டி அண்ணனும் இதை பெரிய அளவில் பண்ணியிருந்தால் புவிசார் குறியீடு கிடைத்திருக்குமோ? அப்போது எல்லாமே அக்மார்க் ஆர்கானிக் தான். இந்தக்கால ஸவீட்கார்ன் சோளக்கருது, அஜினமொட்டோ கலவை கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை