உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெகா நெல் கொள்முதல் நிலையங்கள்: பரீட்சார்த்த முறையில் அரசு துவக்கம்

மெகா நெல் கொள்முதல் நிலையங்கள்: பரீட்சார்த்த முறையில் அரசு துவக்கம்

சென்னை:''பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெகா நெல் கொள்முதல் நிலைய திட்டம், நல்ல முறையில் செயல்பட்டால், மாநிலம் முழுதும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - சேவூர் ராமச்சந்திரன்: திருவண்ணாமலை மாவட்டம் ஆதனுார் ஊராட்சியில், 2,000 விவசாய குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, 500 டன் நெல் உற்பத்தியாகிறது. இங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் சக்கரபாணி: ஆதனுார் ஊராட்சியில் இருந்து, 7 கி.மீ., தொலைவில், ஆரியபாடி, தச்சூர் கிராமங்களில், 2025 ஜனவரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிடம் கோரிக்கை வைத்தால், அதை பரிசீலித்து நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.தி.மு.க., - துரை சந்திரசேகர்: தஞ்சாவூர் மாவட்டம், பஞ்சநதி கோட்டையில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு, 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் பணிகள் மொத்தமாக மேற்கொள்ளப்படுகின்றன.மாநிலம் முழுதும் அதிக நெல் கொள்முதல் செய்யும் இடங்களில், மெகா நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.அமைச்சர் சக்கரபாணி: பஞ்சநதி கோட்டையில் சோதனை முறையில், மெகா நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. சுமை துாக்கும் தொழிலாளர்கள் வாயிலாக, நாள்தோறும் 20 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.மெகா நெல் கொள்முதல் மையங்களில், 200 டன் நெல் கொள்முதல் செய்யப்படும். மூட்டை இல்லாமல், நேரடியாக டிராக்டரில் நெல் எடுத்து வரப்பட்டு, தானியங்கி முறையில் சுத்தம் செய்து, துல்லியமாக எடை போட்டு, 'கன்வேயர்' வாயிலாக சாக்கு பையில், அவை சேகரிக்கப்படுகிறது.இதற்கு 1.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. சோதனை முயற்சியில் இத்திட்டம் நல்ல முறையில் செயல்பட்டால், நெல் அதிகம் விளையும் இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
ஏப் 02, 2025 09:25

பல மாடி கட்டிடங்கள் அமைத்தால் , மழை நீரில் பாழாவது குறையும்


Appa V
ஏப் 02, 2025 06:25

மழை பெய்தால் நெல் மூட்டைகள் தண்ணீரில் நனையும் நிலைமை தான் இன்றும் .மழையில் நனையாதவாறு அரசாங்கம் அக்கறை காட்டுவது டாஸ்மாக் கடைகளும் பார்களும் தான் பஸ்களிலும் மழையில் ரெயின் கோட் போட்டுக்கிண்டு தான் அமரவேண்டும்


முக்கிய வீடியோ