பூஜாரிகள் டூ-வீலர் வாங்க ரூ.12,000 மானியம் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பசும்பால் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
சென்னை:''நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,000 பூஜாரிகளுக்கு, இரு சக்கர வாகனம் வாங்க, தலா 12,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.சட்டசபையில் , அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: கோவில்கள் சார்பில் இவ்வாண்டு, 1,000 ஜோடிகளுக்கு, நான்கு கிராம் தங்க தாலி உட்பட, 70,000 ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமணம் நடத்தி வைக்கப்படும் ↓ஒரு கால பூஜை திட்டம், மேலும் 1,000 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக, 25 கோடி ரூபாய் வழங்கப்படும் ↓அர்ச்சகர்கள், கிராமக் கோவில் பூஜாரிகள் நல வாரிய உறுப்பினராக உள்ள பூஜாரிகள், 10,000 பேருக்கு, இரு சக்கர வாகனம் வாங்க, தலா 12,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் ↓சென்னை மயிலாப்பூர், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோவில்களில், திருவிழா நாட்களில், கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் ↓திருச்செந்துார், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ஆனைமலை, பண்ணாரி, திருப்பரங்குன்றம், மருதமலை, பெரியபாளையம் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு, காய்ச்சிய பசும் பால் வழங்கப்படும் ↓நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோவிலுக்கு விரிவுபடுத்தப்படும். நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்படும் கோவில்களில், வடை, பாயசம் சேர்த்து வழங்கப்படும் ↓பெரியபாளையம் பவானி அம்மனுக்கு, 8 கோடி ரூபாயில் தங்க கவசங்கள் செய்யப்படும் ↓இமயமலையில் உள்ள திருக்கயிலாய மானசரோவர் ஆன்மிக பயணம் செல்லும், 500 பக்தர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியம், 50,000 ரூபாயிலிருந்து, ௧ லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும் ↓நேபாளம், முக்திநாத் ஆன்மிக பயணத்திற்கான அரசு மானியம், 20,000 ரூபாயிலிருந்து, 30,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் ↓கோவில் பணியாளர்களுக்கான இரு சக்கர வாகன கடன் 20,000 ரூபாயிலிருந்து, 50,000 ரூபாயாக உயர்த்தப்படும் ↓பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் இயங்கும் பள்ளி, கல்லுாரிகளில் விடுதி மாணவ - மாணவியருக்கு அனைத்து நாட்களிலும், மூன்று வேளையும் கட்டணமில்லாமல் உணவு வழங்கப்படும் ↓கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், 110 கோடி ரூபாயில், அருங்காட்சியகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், அறுங்கோண வடிவ புல்வெளி நில அமைவிற்கு மத்தியில், 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் ↓ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், 30 கோடி ரூபாயில், 180 அடி உயர முருகன் சிலையும், ராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி, திமிரி சுப்பிரமணியசுவாமி கோவிலில், 6.83 கோடி ரூபாயில், 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்கப்படும் ↓திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரை பரப்பை, கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் திட்டம், 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் ↓ ↓துாத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு அய்யனார் கோவில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர் மருந்தீஸ்வரர், சென்னை மாம்பாக்கம் முருகநாதீசுவரர் உள்ளிட்ட, 11 கோவில்களில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்படும் ↓காஞ்சிபுரம் தேவராஜபெருமாள் கோவிலில், 4.25 கோடி ரூபாயில் திருத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்படும் ↓திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 8 கோடி ரூபாயில் பக்தர்கள் இளைப்பாரும் மண்டபம் கட்டப்படும் ↓பழனி தண்டாயுதபாணி கோவிலில், 25 கோடி ரூபாயில் புதிய அன்னதான கூடம் கட்டப்படும் ↓சமயபுரத்தில், 21 கோடி ரூபாய், ராமேஸ்வரத்தில் 15 கோடி ரூபாய், ஸ்ரீரங்கத்தில் 12 கோடி ரூபாய், சென்னை வேளச்சேரியில் 3.50 கோடி ரூபாயில் கோவில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.- அமைச்சர் சேகர்பாபு
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்
பழனி முருகன் கோவில் இழுவை ரயிலில், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். திருத்தணி, மருதமலை, அழகர்கோவில், பண்பொழி, திருச்செங்கோடு, சென்னிமலை, சிவன்மலை ஆகிய மலை கோவில்களுக்கு, மாற்றுத்திறனாளிகள், கோவில் பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
சமயபுரம், சென்னையில் செவிலியர் கல்லுாரிகள்
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்திலும், புதிதாக செவிலியர் கல்லுாரிகள் அமைக்கப்படும். திருச்சி, திருவெள்ளரை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரி அமைக்கப்படும்.கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், பேரூர் வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்கப்படும் என, சட்டசபையில் நேற்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.