போதைப் பொருள் கடத்தல் வழக்கு : தாய், மகனுக்கு எட்டு ஆண்டு சிறை
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தாய், மகன் உள்ளிட்ட மூவருக்கு, தலா எட்டு ஆண்டுகள், 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம், சென்னைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் இச்சம்பவம் நடந்தது. அப்போது, பிளாஸ்டிக் பையில் ஹெராயின் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ஜெயந்தி, அவரது மகன் ஜெகன், இலங்கையைச் சேர்ந்த சிவபாலன், நந்தேஷ்னா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை, போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.பி.குமார் ஆஜரானார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயந்தி, ஜெகன், சிவபாலனுக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார். நந்தேஷ்னாவை விடுதலை செய்து உத்தரவிட்டார்.