உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பாலிடெக்னிக்கில் புதிய பாடப்பிரிவுகள்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பாலிடெக்னிக்கில் புதிய பாடப்பிரிவுகள்

சென்னை : ''பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்த குறையை போக்க, கூடுதல் பாடப்பிரிவுகள் வரும் கல்வி ஆண்டில் உருவாக்கப்பட உள்ளன,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க., - வெங்கடாச்சலம்: கடந்த 2022ல் முதல்வர் அறிவித்தபடி, அந்தியூர் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, பழங்குடியின, பட்டியலின மாணவர்கள், 700 பேர் படிக்கின்றனர். மூன்றாம் ஆண்டு படிப்பை முடித்து, 150 பேர் வேலைக்கு தேர்வாகியுள்ளனர். ஏழை மாணவர்களின் நலன் கருதி, இங்கு கூடுதலாக புதிய பாடப் பிரிவுகளும், முதுகலை பட்ட படிப்புகளும் துவங்க வேண்டும்.அமைச்சர் செழியன்: நான்கு ஆண்டுகளில், 32 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளை, முதல்வர் உருவாக்கி தந்துள்ளார். அந்தியூரில் துவங்கப்பட்ட கல்லுாரியில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்லுாரி தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டடமாக மாற்றும் முயற்சி நடக்கிறது. அதன்பின், புதிய பாடப்பிரிவுகள், முதுகலை பாடப் பிரிவுகள் துவங்கப்படும்.வெங்கடாச்சலம்: அந்தியூர் தொகுதியில் பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்க வேண்டும் என மக்கள், மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கின்றனர். அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.அமைச்சர் செழியன்: பொறியியல் கல்லுாரிகள் ஆதிக்கம் காரணமாக, பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. அந்த தொய்வை போக்கும் வகையில், நான் முதல்வன், புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ், 30 லட்சம் மாணவர்களை பயனாளிகளாக, முதல்வர் மாற்றியுள்ளார். இருப்பினும், பல பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்த குறையை போக்க, கூடுதல் பாடப்பிரிவுகள் வரும் கல்வி ஆண்டில் உருவாக்கப்பட உள்ளன. அந்தியூர் தொகுதியை பொறுத்தவரை, மாணவர் சேர்க்கை அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ