உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு 11 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு 11 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

சென்னை:ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்து, சதிச் செயலில் ஈடுபட்டது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் வீடு உட்பட 11 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, சென்னை அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசியர் டாக்டர் ஹமீது உசேன், அவரின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட ஆறு பேர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.அவர்களுக்கு வெளிநாட்டு பயங்கரவாத சக்திகளுடன் தொடர்பு இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., விசாரணையில் உத்தரவிட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க, 'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற, 'யு டியூப்' சேனல் நடத்தி வந்ததும், சென்னை ராயப்பேட்டை ஜானிகான்கான் சாலையில், 'மாடர்ன் எஷன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' என்ற பெயரில் அமைப்பை துவங்கி, பயங்கரவாத பயிற்சி அளித்தது தெரியவந்தது.இதுதொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், 26; முஜிபுர் ரஹ்மான், 46; சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அஜீஸ் அகமது, 36, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்கு மூலம் அடிப்படையில், சென்னை அடையாறில் வசிக்கும் மென்பொறியாளர் முகமது ரியாஸ் வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று காலை 6:15 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, சென்னை ராயப்பேட்டையில் முகமது அலி, ஏழுகிணறு பகுதியில் ரஹ்மான், நீலாங்கரை அருகே வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ் ஆகியோரின் வீடுகள் என, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 10 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, இளங்கடையில் உள்ள முகமது அலி அலிம்ஷா என்பவரின் வீட்டிலும் சோதனை செய்தனர்.இவர், கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார். சோதனையில், பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட, டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை