நீதிபதி இல்லாமல் திண்டாடும் போலிமுத்திரை தாள் வழக்கு
மும்பை: போலி முத்திரை தாள் வழக்கில் விசாரணையை நடத்தி வரும் நீதிபதி காலியிடத்திற்கு புதிய நீதிபதி நியமிக்கப்படாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய போலி முத்திரை தாள் வழக்கில் அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த அவரது மேனேஜர் இனாம் சவுத்ரி வழக்கு விசாரணையின் போது தலைமறைவானார்.கடந்த 99-ம் ஆண்டு தலைமறைவான இவர் இந்தாண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். பத்திரபதிவு வழக்கை முதலில் இருந்து விசாரணை நடத்தி வருபவர் சிறப்பு நீதிபதியான சித்ரா பேடி என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் இடமாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்ககை விசாரிப்பதற்கு நீதிபதி யாரும் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட சவுத்ரியை பாம்பே உயர்நநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.திப்ஷே ஜாமினில் விட உத்தரவு பிறப்பித்தார். இதனைதொடர்ந்து சிறப்பு நீதிபதி இல்லாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி திப்ஷே இந்த வழக்குகளை காலதாமதமின்றி வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டார். இது குறித்து அரசு தரப்பு வக்கீல் பிரதீப் காரத் குறிப்பிடுகையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய நீதிபதி நியமிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்