உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 வகை கனிமங்களை வெட்டி எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை : மத்திய அரசு உத்தரவு

30 வகை கனிமங்களை வெட்டி எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை : மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தாமிரம், நிக்கல், கிராபைட் உள்ளிட்ட, 30 வகை கனிமங்களை, சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும்போது, மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சகம், நாட்டில் கிடைக்கும் கனிமங்களை, 'முக்கியமானவை, அணுக் கனிமங்கள்' என, வகைபடுத்தி உள்ளது. இதன் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில், என்ன வகை கனிமங்கள் கிடைக்கும் என்பது குறித்த தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கனிமங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடிக்கவும், சுரங்கம் தோண்டி எடுக்கவும் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனிமங்கள் எடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்நிறுவனங்கள், பல்வேறு கட்ட அனுமதிகள் பெற்ற பின் கனிமங்களை வெட்டி எடுக்க, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அடிப்படையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், லித்தியம், கிராபைட், தாமிரம், கோபால்ட், நிக்கல், டைட்டானியம், பாஸ்பரஸ், பொட்டாஷ், சிலிக்கான், டங்க்ஸ்டன் உள்ளிட்ட, 24 வகை கனிமங்கள், முக்கிய கனிமங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன. இதே போன்று, ஆறு வகை கனிமங்கள், அணுக் கனிமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்கள் எடுப்பதில் தனியார் ஈடுபட, 2023ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது போன்ற நடைமுறைகளை நீக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் இயக்குநர் ராஜிவ் ரஞ்சன் பிறப்பித்துள்ள உத்தரவு: முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்கள் எடுக்கும் தனியார் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயாரிக்க வேண்டும். இதற்காக, 2016ல் வகுக்கப்பட்ட விதிகளின்படி, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என, விதிகளில் உள்ளது. பல்வேறு தரப்பு கோரிக்கைகள் மற்றும் அரசின் முடிவு அடிப்படையில், இந்த விதியில் இருந்து, 24 வகை முக்கிய கனிமங்கள், 6 வகை அணுக்கனிமங்கள் எடுக்கும் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 30 கனிமங்கள் என்னென்ன? பெரில் அல்லது பெரிலியம், காட்மியம், கோபால்ட், காலியம், கிளவ்கோனைட், கிராபைட், இண்டியம், லித்தியம், மாலிப்டினம், நிக்கல், நியோபியம், பாஸ்பேட், பிளாட்டினம் குழு, பொட்டாஷ், யுரேனியம், தோரியம் இல்லாத அரிய மண் குழுக்கள், ரேனியம், செலினியம், டான்டலம், டெலுரியம், டின், டைட்டானியம், டங்ஸ்டன், வானடியம், சிர்கோனியம், ஸ்ட்ரோன்டியம், ஹாப்னியம், ஜெர்மானியம், பிஸ்மத், பாஸ்பரஸ், ஆன்டிமோனி. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sasikumaren
செப் 14, 2025 17:26

நமது நாட்டிற்கு தேவையான மணல் வகைகள் கனிமங்கள் எடுத்தால் யாரும் குறை சொல்ல போவதில்லை தென் தமிழகத்தில் இருந்து வெட்டி எடுக்க பட்ட கருங்கற்கள் என்ன ஆயிற்று அதெல்லாம் பல லட்சம் கோடி மதிப்புள்ள கற்கள்


Nirranjan
செப் 12, 2025 21:33

மக்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன அவர்களின் வாழ்வாதாரம் விற்பனை விலைக்கு குறைவாகவே நிலங்களை வாங்குவது ,மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்து தான் பல திட்டங்கள் செயல்படுகின்றனர்.இதனால் பயன்படுவது அரசியல்வாதிகளும் கம்பெனிகளும் தானே தவிர,மக்கள் அல்ல...


Saai Sundharamurthy AVK
செப் 12, 2025 12:22

மக்களை பொறுத்தவரை ஒத்துழைப்பு கொடுப்பது ஒன்று தான். ஏனெனில் தொழில்நுட்ப வளர்ச்சியை அனுபவிக்கப் போவதே அவர்கள் தான். வேலை வாய்ப்பு கொடுக்கும் திட்டங்களை தடுக்கக் கூடாது. இதில் நாட்டு நலனே முக்கியம். அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களின் கருத்தை எல்லாம் கேட்பதில்லை.


Mani . V
செப் 12, 2025 05:57

அப்புறம் என்ன, அப்பா ஆட்சி கனிமவளக் கொள்ளையை இஷ்டம்போல் செய்து கொள்ளையடிக்கலாம். கொள்ளையடித்ததை வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். ஜீ யின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு.


Mani . V
செப் 12, 2025 05:48

யார் சொன்னது தமிழக அரசு மட்டும்தான் மக்கள் விரோத அரசு என்று? திமுக வுடன் புரிந்துணர்வு கூட்டணி வைத்துள்ள மத்திய அரசும் மக்கள் விரோத அரசுதான்.


Priyan Vadanad
செப் 12, 2025 05:05

அரசாங்கமே எடுத்து நடத்தினால்தான் என்ன? தனியாருக்கு அரசின் உரிமையை தாரை வார்ப்பதில் அப்படியென்ன சுகமோ அரசுக்கு.


தாமரை மலர்கிறது
செப் 12, 2025 02:17

மக்கள் ஒன்றும் சும்மா ஓட்டுபோடவில்லை. அவர்களிடம் கேட்டால், பணம் கொடு என்று தான் கேட்பார்கள். ஒரு மண்ணாங்கட்டியும் கேட்கத்தேவை இல்லை. தொழில்துறையை வளர்க்க, மக்களிடம் எந்தவித கருத்தும் கேட்க தேவை இல்லை. அரசு சீக்கிரம் முடிவெடுத்தால் மட்டுமே, தொழில்துறை வேகமாக வளரும்.


முக்கிய வீடியோ