சென்னை: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுடன் இரண்டாவது முறையாக பேச்சு நடத்திய அமைச்சர் சுப்பிரமணியன், 723 பேரை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்தார். அதை ஏற்க மறுத்து, ஐந்தாவது நாளாக, அரசு செவிலியர்கள் கடும் குளிரிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், பணி நிரந்தரம், சம வேலைக்கு, சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 18ம் தேதி, சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்டனர். இறக்கி விட்டனர் அப்போது, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமாருடன், சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சில் தீர்வு ஏற்படாததால், போலீசார் அனுமதித்த நேரத்தை தாண்டியும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அவர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டனர். இரவு நேரத்திலும் அங்கே போராட்டத்தை செவிலியர்கள் தொடர்ந்ததால், மீண்டும் கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் அடைத்தனர். பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாலையில் விடுவிக்கப்பட்ட செவிலியர்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். செவிலியர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்த நிலையில், அவர்களுடன் அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று மீண்டும் பேச்சு நடத்தினார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகளுடன், மற்ற செவிலியர் சங்கத்தினரும் பங்கேற்றனர். அமைச்சரின் கோரிக்கையை சில சங்கங்கள் ஏற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து, நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்தனர். அரசாணை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
நிரந்தர பணியாளர்களை போல, தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அரசாணை வெளியிடப்பட உள்ளது. கடந்த 2014 -- 15ல், தற்காலிக செவிலியர்களை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். மேலும், இரண்டு ஆண்டுகள் பணி செய்த பின், செவிலியர் துறையில் காலி பணியிடம் உருவானால், பணி நிரந்தரம் என, சொல்லப்பட்டு, பணி நியமனம் நடந்துள்ளது; இந்த முறையே தவறு. எனினும், 7,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்ற பின், 3,614 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளோம். தற்போது, 8,322 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, தொகுப்பூதிய செவிலியர்களுக்கான ஊதியம், 14,000 ரூபாயில் இருந்து, 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, 169 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. அத்துடன், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த செவிலியர் கண்காணிப்பாளர் நிலை - 2 பதவி உயர்வு, 266 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அ தேபோல், செவிலியர் போதகர் நிலை - 2 பணியிடங்களுக்கு, 140 பேர் பதவி உயர்வு பெறுகின்றனர். மேலும், அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடங்களில், 148 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதுபோன்றவற்றால், 723 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். மற்ற, 7,599 பேருக்கு காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய, 716 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில், நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 'தொடர்ந்து நடக்கும்' தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலர் சுபின் கூறியதாவது: அமைச்சருடன் இரண்டாவது முறை, செயலருடன் ஒருமுறை பேச்சு நடத்தியும், அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்பதாக தெரியவில்லை. எட்டு ஆண்டுகளாக குறைந்த சம்பலத்தில், அதிக வேலை செய்து வருகிறோம். ஆனால், 723 பணியிடங்களை காரணம் காட்டி, மற்றவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்வோம் என்பதை ஏற்க முடியாது. போராட்டத்திற்கு செவிலியர்கள் முதல், டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த அரசு பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்றைய தினத்தை விட, இன்று நர்ஸ்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எங்கள் கோரிக்கையை, அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.