உள்ளூர் செய்திகள்

 இதே நாளில் அன்று

மே 11, 1978 மதுரையில், சவுராஷ்ட்ரா பட்டு நெசவாளியான வெங்கடாஜலபதி அய்யர் - பாக்யலட்சுமி தம்பதியின் மகனாக, 1923 மார்ச் 24ல் பிறந்தவர், பி.வி.நரசிம்மன். மதுரை சவுராஷ்ட்ரா துவக்க பள்ளியில் படித்தார். தன், 11வது வயதில், 'பாய்ஸ்' நாடக கம்பெனியில் சேர்ந்து, பெண் வேடங்களில் நடித்தார். சரஸ்வதி வேடத்தில் நடித்ததால், 'பாரதி' பட்டம் பெற்று, நரசிம்ம பாரதியானார். 'பாமா விஜயம்' நாடகத்தில் பெண் வேடமிட்டு ரசிகர்களை கவர்ந்த இவரது நடிப்பை பார்த்து, சினிமா தயாரிப்பாளர் ஒய்.வி.ராவ் தன் பக்த மீரா படத்தில் சிறு வேடம் தந்தார். தொடர்ந்து, திகம்பர சாமியார், பொன்முடி, அபிமன்யூ, கிருஷ்ண விஜயம், திரும்பிப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து, புகழ் பெற்றார். தன் நண்பர் டி.எம்.சவுந்தரராஜனுக்காக பரிந்துரை செய்து, கிருஷ்ண லீலை படத்தில் அவரை பாடகராக்கினார். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி, என்.டி.ராமாராவ் படங்களிலும், கன்னட நடிகர் ராஜ்குமார் படங்களிலும் நடித்துள்ள இவர், தன் 55வது வயதில், 1978ல் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை