உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மேயரின் கணவர் கைது கண்துடைப்பு நாடகம்; திருப்பரங்குன்றத்தில் பழனிசாமி விமர்சனம்

மதுரை மேயரின் கணவர் கைது கண்துடைப்பு நாடகம்; திருப்பரங்குன்றத்தில் பழனிசாமி விமர்சனம்

மதுரை : ''மதுரை மாநகராட்சி மேயரைக் காப்பாற்ற அவரது கணவரை கைது செய்து கண்துடைப்பு நாடகம் நடத்தியது தி.மு.க., அரசு'' என மதுரை திருப்பரங்குன்றத்தில் 4வது கட்ட தேர்தல் பிரசாரத்தை துவக்கி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

அவர் பேசியதாவது:

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போருக்கு டோக்கன் வழங்குவதிலும் தி.மு.க., ஊழல் செய்கிறது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ஜல்லிக்கட்டு அமைப்பைச் சேர்ந்தவர்களே போட்டியை நடத்துவர். அவனியாபுரத்தில் 'ஜல்லிக்கட்டுக் காளை' சிலை அமைக்கப்படும். மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. ஓய்வு பெற்ற, தற்போது பணிபுரியும் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முறைகேடு நடந்ததற்கு மேயரை கைது செய்திருக்க வேண்டும். மேயரை காப்பாற்ற அவரது கணவரை கைது செய்து கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளனர். காஞ்சிபுரம், திருநெல்வேலி, கோவை என தமிழகம் முழுதும் பல மாநகராட்சிகளில் ஊழல் பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். டி.ஜி.பி., பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டவர், தகுதியடிப்படையில் நியமிக்கப்படவில்லை. தகுதியுள்ள 8 டி.ஜி.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. முதல்வர் இதுவரை 4 முறை வெளிநாடு சென்று வெறும் ரூ.18 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ளார். தி.மு.க., அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் இதுவரை கொடுக்கவில்லை. 'வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பழனிசாமி பெரிதாக நினைக்கிறார்' என்று அமைச்சர் ராஜா பேசுகிறார். உங்கள் அப்பா மத்திய அமைச்சராக இருந்தவர் என்பதால் நீங்கள் செழிப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் தலைவரின் அப்பா முதல்வராக இருந்தவர். அதனால் நீங்கள் தங்க ஸ்பூனிலும், வெள்ளித் தட்டிலும் சாப்பிடலாம். நான் மக்களோடு மக்களாக இருக்கிறவன். விவசாயியான எனக்கு கையில் எடுத்து சாப்பிடத்தான் தெரியும். தற்போது போதை மாநிலமாக தமிழகம் உள்ளது. போதைப் பொருள் விற்காத இடமே இல்லை. ''மாணவர்கள், இளைஞர்கள் போதையின் பாதையில் செல்லாதீர்கள்'' என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின் இப்படி பேசுவதால்என்ன பயன். அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு ரூ.15 கோடி, மாதத்துக்கு ரூ.450 கோடி, ஆண்டுக்கு ரூ.5400 கோடி என நான்காண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். மின்கட்டணத்தை 67 சதவீதம் உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு 'பீக் ஹவர்' கட்டணம் தனியே வசூலிக்கின்றனர். எனினும் மின்சார வாரியம் கடனில் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100 முதல் 150 சதவீதம் வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு தி.மு.க., அரசுதான். விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது ரூ.100 கோடி நிதி ஒதுக்கி, அண்டை மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொடுக்கப்பட்டது. தற்போதைய அரசோ 51 மாதங்களில் விலைக்குறைப்பில் ஈடுபடவே இல்லை. 'உங்களுடன் ஸ்டாலின்' என நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். நான்கு ஆண்டுகள் துாங்கிவிட்டு தேர்தல் நேரத்தில் தந்திரமாக ஏமாற்றுகின்றனர். முகாமில் வாங்கப்பட்ட மனுக்கள், திருப்புவனத்தில் ஆற்றில் வீசப்பட்டது. இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள். திருப்பரங்குன்றம் மலைக்கு 'ரோப் கார்' வசதி, கிரிவலப்பாதை மேம்படுத்தப்படும், அவனியாபுரம் பைபாஸ் முதல் நெல்பேட்டை வரை உயர்மட்ட பாலம், விரகனுார் ரவுண்டானா உயர்மட்ட பாலம் கட்டுவோம் என்றார்கள். செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தப்படும். விவசாயிகள் பயனடையும் வகையில் 'மல்லிகை சென்ட்' தொழிற்சாலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை