கம்யூனிஸ்ட் உறவை கைவிடுங்கள் தி.மு.க.,வுக்கு பன்னீர் அறிவுரை
சென்னை:'முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புறக்கணிக்கும் கேரள அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியை தி.மு.க., முறிக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.* பன்னீர்செல்வம்: முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 152 அடி வரை உயர்த்தலாம் என்று, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பத்து ஆண்டுகளாகியும், முல்லை பெரியாறு அணை பகுதியில் ஆண்டு பராமரிப்பு பணிகளைக்கூட மேற்கொள்ள, கேரள அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முல்லை பெரியாறு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு செவி சாய்க்காதபட்சத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும்.* தினகரன்: முல்லை பெரியாறு அணையில், ஆண்டுதோறும் நடக்கும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கேரளா அனுமதி மறுக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 'கார் பார்க்கிங்' அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வரும் கேரள அரசின் பிடிவாத போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாயப்பை, முதல்வருக்கு கேரளா பயணம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.கேரளா பயணம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே, சுயநலத்திற்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும், மாநில உரிமைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மீண்டும் ஒரு முறை அடகு வைக்காமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு, முதல்வர் தமிழகம் திரும்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.