சட்டத்தின் முன் பார்லிமென்டும் சமம்: சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி : சட்டத்தின் முன் பார்லிமென்டும் சமம் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பழம் பெரும் பாலிவுட் நடிகை தேவிகா ராணி, அவரது கணவர் ரஷ்ய ஓவியரான ஸ்வெட்டோஸ் லாவ் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். இவர்களுக்கு பெங்களூரு அருகே 465 ஏக்கர் எஸ்டேட் உள்ளது. தேவிகா ராணி தம்பதிக்கு வாரிசுகள் இல்லாததால், அந்த எஸ்டேட்டில் உள்ள அரிய மரங்களையும், ரஷ்ய ஓவியரின் ஓவியங்களை பாதுகாப்பதற்காகவும் இந்த எஸ்டேட்டை அரசு கையகப்படுத்தியது.
ஸ்வெட்டோஸ் லாவ், இறப்பதற்கு முன், எஸ்டேட்டின் ஒரு பகுதியை கே.டி.பிளான்டேஷன் என்ற நிறுவனத்துக்கு விற்று விட்டார். தேவிகா ராணி தம்பதியர் இறப்புக்கு பின், அவர்கள் கே.டி.பிளான்டேஷன் நிறுவனத்துக்கு விற்ற பகுதியையும் சேர்த்து அரசு கையகப்படுத்திக் கொண்டது. இதற்கான சட்ட மசோதா, கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து கே.டி.பிளான்டேஷன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்தது.
'பொதுத் திட்டத்திற்காக தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். இந்த சட்டம் எல்லாருக்கும் பொருந்தும். நாட்டின் உயர்ந்த அமைப்பாக பார்லிமென்ட் இருந்தாலும், அதுவும் சட்டத்தை மதித்து தான் நடக்க வேண்டும். அதற்கு மட்டும் சட்டத்தில் இருந்து விலக்களிக்க முடியாது' என, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். எனினும், கே.டி.பிளான்டேஷனின் மனுவை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.