உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன்: அரசியல் கட்சியினரே பொறுப்பேற்க யோசனை

பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன்: அரசியல் கட்சியினரே பொறுப்பேற்க யோசனை

திருப்பூர்: ''பொதுக்கூட்ட மைதானத்தில் குவியும் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பொறுப்பை அரசியல் கட்சியினரே ஏற்க வேண்டும்'' என்ற யோசனையை, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் குழுவிடம், கழிவு மேலாண்மை மன்றம் முன்வைத்துள்ளது. மக்காத பாலிதீன் உள்ளிட்ட குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பிரச்னை, மாநில அளவில் பெரும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், இப்பணியில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இணைப்பு பாலமாக செயல்படும் நோக்கிலும் மாநில அளவில், 'கழிவு மேலாண்மை மன்றம்' து வங்கப்பட்டுள்ளது. இதன் காப்பாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார், தலைவராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு நகராட்சி நிர்வாகங்களின் தலைமை பொறியாளர் முருகேசன் ஆகியோர் செயல்படுகின்றனர். கல்லுாரி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்டோர். உறுப்பினர்களாக உள்ளனர். மன்றத்தின் செயலாளர் டாக்டர் வீரபத்மன் கூறியதாவது: குடியிருப்பு, ஓட்டல்,வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து உள்ளாட்சி நிர்வாகங்கள் சேகரிக்கும் மக்காத பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை எப்படி அகற்றுவது, யாரிடம் கொடுப்பது என்பது தெரியாமல் குழம்பும் நிலை உள்ளது. அவற்றை அப்புறப்படுத்த முடியாமல் திணறுகின்றன. மக்காத கழிவுகளை அகற்றுவது தொடர்பான தெளிவான வழிகாட்டுதலும் இல்லை.

ஏ.ஐ., மூலம் சாத்தியம்

மக்காத பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குப்பைக் கழிவுகளை ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக அகற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இருப்பினும், அவர்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தொடர்பு இல்லை. இவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் தான், கழிவு மேலாண்மை மன்றம் துவங்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களில் குவியும் பாலிதீன்

தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் திரளும் நிலையில், கூட்டம் முடிந்து அவர்கள் கலைந்து செல்லும் போது, டன் கணக்கில் பாலிதீன் பாட்டில், கவர் உள்ளிட்டவை சிதறிக்கிடக்கின்றன. அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடும் போது, அவர்களால் தங்களின் அன்றாடப்பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. உதாரணமாக, சில நாட்களுக்கு முன் கரூரில் த.வெ.க., கூட்டத்தில் நடந்த அசம்பாவித சம்பவத்தில், அங்கு சிதறிக்கிடந்த செருப்புகள் மட்டும், டன் கணக்கில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்கு குவிந்த குப்பைகளை அகற்றவே சில நாட்களாகியுள்ளது. இதுபோன்ற அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு போன்றவற்றில் குவியும் பாலிதீன் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை, மறுசுழற்சி நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அந்தந்த அரசியல் கட்சியினரே ஏற்க வேண்டும். கரூர் சம்பவத்தின் எதிரொலியாக, அரசால் நியமிக்கப்பட்டுள்ள, வழிகாட்டு நெறிமுறை வகுக்கும் குழுவினரின் கவனத்துக்கு, இந்த யோசனையை கொண்டு சென்றுள்ளோம்.

பாடமாக்க வேண்டும்

மேலும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வது தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை பள்ளி, கல்லுாரிகளில் பாடமாக வைக்க வேண்டும். பாலிதின் பைக்கு மாற்றாக, இயற்கை சார்ந்த ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற யோசனையையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை