பொட்டு சுரேஷுக்கு போலீஸ் காவல் கோரிய மனு தள்ளுபடி
மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டுசுரேஷை (சுரேஷ்பாபு), போலீஸ் காவலில் விடக்கோரிய மனுவை, முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது.
மதுரை, அண்ணாநகர் ஆடிட்டர் அமர்நாத் கொடுத்த நில அபகரிப்பு புகாரில், பொட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டு, பாளை., சிறையில் உள்ளார். அவரை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, குற்றப்பிரிவு போலீசார், கோர்ட்டில் மனு செய்தனர். மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.
பொட்டு சுரேஷ் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ''வழக்கில் சதி திட்டம் தீட்டியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம், ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை. இது சிவில் பிரச்னை. போலீசாரால் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. மனுதாரரை போலீஸ் காவலில் விசாரிக்க முகாந்திரம் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.
மாஜிஸ்திரேட் முத்துக்குமரன், ''பொட்டு சுரேஷ் சதிதிட்டம் தீட்டியதாகவும், உடன் இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் போலீசார் பதிவு செய்யவில்லை. அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. மனுதாரரை போலீஸ் காவலில் அனுப்புவது ஏற்புடையதல்ல. போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.