உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாரிடம் மின் நிலைய பராமரிப்பு; தொழிற்சங்கங்கள் எதிர்ப்பால் நிறுத்தம்

தனியாரிடம் மின் நிலைய பராமரிப்பு; தொழிற்சங்கங்கள் எதிர்ப்பால் நிறுத்தம்

சென்னை; தொழிற்சங்கங்கள் எதிர்ப்பால், துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை, தனியாருக்கு விடுவதற்கான உத்தரவை மின் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல்வேறு திறன்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று, உயரழுத்தம் குறைக்கப்படுகிறது. பின், 'பீடர்' எனப்படும், மின் வழித்தடங்களில் மின்சாரம் அனுப்பப்பட்டு, மின் சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது. துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை, வாரிய பணியாளர்களே மேற்கொள்கின்றனர். இந்நிலையில், 765, 400, 230 கிலோ வோல்ட் திறன் உடைய துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை, இரு ஆண்டுகளுக்கு தனியாருக்கு வழங்க மின் வாரியம், கடந்த, 12ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு பணியாளர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இந்த உத்தரவை திரும்ப பெறுமாறு, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அதன் தலைவர் ராதாகிருஷ்ணனை சந்தித்து, தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகிகள் நேற்று வலியுறுத்தினர்.இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறுகையில், ''துணை மின் நிலையங்கள் பராமரிப்பை, அவுட்சோர்சிங் முறையில் விடும்பட்சத்தில், ஒப்பந்த நிறுவனம் அதிக ஊழியர்களை நியமிப்பதாக தெரிவித்து, குறைந்த ஊழியர்களை நியமிக்கும்.''அதிகம் பேருக்கு சம்பளத்தை வாங்கும். இதுபோல பல பாதிப்புகள் உள்ளன; இந்த பாதிப்புகள் குறித்து, வாரிய தலைவரிடம் கூட்டுக்குழு சார்பில் விரிவாக எடுத்து கூறப்பட்டது. அதிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்ட அவர், உத்தரவை நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை