ஆசியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அப்போலோ துணை தலைவர் ப்ரீதா ரெட்டி
சென்னை:'பார்ச்சூன்' பத்திரிகை வெளியிட்ட, 2024ம் ஆண்டுக்கான ஆசிய தொழில்துறையின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் உலகளாவிய தொழில் துறை பத்திரிகை, பார்ச்சூன். இந்த பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வகைகளின் கீழ் சிறந்த, 100 தலைவர்கள் பட்டியலை வெளியிடுகிறது. இந்தாண்டுக்கான ஆசிய தொழில் துறையின் சக்தி வாய்ந்த, 100 பெண்கள் பட்டியலை பார்ச்சூன் வெளியிட்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப நிறுவனங்களை மாற்றி அமைத்து, புதுமையை புகுத்தி, தொழில் வளர்ச்சியை முன்னெடுக்கும் பெண்கள் இந்த பட்டியலில் தேர்வாகின்றனர். இதில், அப்போலோ குழுமத்தின் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி, 44வது இடம் பிடித்துள்ளார். அவர் குறித்து பார்ச்சூன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் ரெட்டியின் மூத்த மகளான ப்ரீதா ரெட்டி, ஒரு லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு உள்ள குடும்ப நிறுவனத்தை, டிஜிட்டல் மயமாக்கி வருகிறார். புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்துள்ளார். 'அதன் வாயிலாக ஊரக பகுதிகளுக்கு மருத்துவ சேவை, ஆன்லைன் முறையில் சிகிச்சை, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நோய் கண்டறிதல் மற்றும் ரோபோடிக் முறையில் அறுவை சிகிச்சை போன்றவை சாத்தியமாகி வருகின்றன' என, கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனா நாட்டை சேர்ந்த 20 பெண்கள், தாய்லாந்தைச் சேர்ந்த 14 பேர், ஜப்பானை சேர்ந்த ஒன்பது பெண்கள், இந்தியாவிலிருந்து எட்டு பெண்கள் என, பல்வேறு ஆசிய நாட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.