| ADDED : நவ 11, 2024 02:05 PM
கோவை : தேஜஸ் போர் விமானத்தின் முக்கிய பாகத்தை தயாரித்த கோவையைச் சேர்ந்த எல்.எம்.டபுள்யூ., நிறுவனம், அதனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இந்திய விமானப்படையில் இருக்கும் இலகுரக போர் விமானம் தேஜஸ். இந்த விமானம், மார்க் 1, மார்க் 1ஏ மற்றும் தேஜஸ் டிரெய்னர் உள்ளிட்ட வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த விமானத்தை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாதுகாப்பு படையில் தேஜஸ் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து 83 தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை ஆர்டர் கொடுத்திருந்தது.இதில், தேஜஸ் மார்க் 1ஏ வகை விமானத்தின் முக்கிய பாகத்தை தயாரிக்கும் பணியை கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லட்சுமி மெஷின் வொர்க்ஸ் (எல்.எம்.டபுள்யூ) நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 'ஏர் இன்டேக் அசெம்ப்ளி' என்ற அந்த பாகத்தை மொத்தம் 40 எண்ணிக்கையில் தயார் செய்ய இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் 2022ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஏர் இன்டேக் அசெம்பிளி', விமானத்தின் இன்ஜினுக்கு சீரான வகையில் காற்று உட்செல்வதை உறுதி செய்வதாகும்.முதலாவதாக தயாரிக்கப்பட்ட ஏர் இன்டேக் அசெம்பிளியை ஒப்படைக்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. எச்.ஏ.எல்., நிறுவனத்தின் பொதுமேலாளர் முகமதுவிடம், 'ஏர் இன்டேக் அசெம்ப்ளி'யை எம்.எல்.டபுள்யூ., நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஒப்படைத்தார். இதில், இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.ராணுவ தளவாட தயாரிப்பில் சுயசார்பு அடையும் நோக்கத்துடன், 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சியின் ஒரு பகுதியாக, இத்தகைய பணிகள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.