உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து அடமான கடன் பத்திரங்கள் இனி ஆன்லைனில் மட்டுமே பதிவு

சொத்து அடமான கடன் பத்திரங்கள் இனி ஆன்லைனில் மட்டுமே பதிவு

சென்னை:சொத்தை அடமானம் வைத்து கடன் பெறுவது தொடர்பான பத்திரங்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்வதை கட்டாயமாக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சொத்து விற்பனை உட்பட பல்வேறு பத்திரங்கள், சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதில், பத்திரங்கள் குறித்த அடிப்படை தகவல்கள் 'ஆன்லைன்' முறையில் பெறப்படுகின்றன. அவற்றின் மீதான முதல்கட்ட ஆய்வுக்கு பின், சம்பந்தப்பட்ட பத்திரம் பதிவுக்கு ஏற்கப்படும். பத்திரப்பதிவை இறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். தயக்கம் இந்நிலையில், 'ஸ்டார் 3.0' சாப்ட்வேர் தயாரிப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், கடன் தொடர்பான அடமான பத்திரங்கள், நிறுவனங்கள் இடையிலான சொத்து பரிமாற்ற ஆவணங்கள் போன்றவற்றை, 'ஆன்லைன்' வழியே பதியும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது . இந்த வசதியை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வராமல் பத்திரங்களைப் பதியலாம். அதேநேரம், நேரில் சென்று பதியும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இதனால், பெரும் பாலான மக்கள் நேரில் வந்து பதிவு செய்யும் நடை முறையையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, குறிப்பிட்ட சில வகை பத்திரங்களை, சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வராமல், 'ஆன்லைன்' முறையில் மட்டும் பதிவு செய்வதை கட்டாயமாக்க, பதிவுத்துறை திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: வீட்டின் மீது கடன் வாங்குவோர், அது தொடர்பான அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைக்கின்றனர். இதற்கான அடமான பத்திரத்தை பதிவு செய்ய மற்றும் ரத்து செய்ய, சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வர வேண்டியதில்லை. ஆனால், 'ஆன்லைன்' வசதியை பயன்படுத்த, மக்கள் மத்தியில் தயக்கம் உள்ளது. திட்டம் அதற்கு காரணம், நேரில் சென்று பதிவு செய்யும் வசதி அமலில் இருப்பதே. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வருவதை குறைக்க, 'ஆன்லைன்' முறை பதிவை கட்டாயமாக்க திட்டமிட்டு உள்ளோம். 'ஸ்டார் 3.0' சாப்ட்வேர், சோதனை ஓட்டம் நடக்கும் நிலையில், படிப்படியாக பத்திரங்களை முழுமையாக, 'ஆன்லைன்' முறைக்கு மாற்ற இருக்கிறோம். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ