| ADDED : ஜூன் 05, 2025 03:23 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில், 10 ரயில் பாதை பணிகளுக்கு, மத்திய அரசு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், அந்த நிதியை அதே திட்டங்களுக்கே பயன்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடக்கும் 10 ரயில் பாதை பணிகளுக்கான நிதியை, பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திருப்பி அனுப்பி இருந்தார். குறிப்பாக, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புதுார்; ஈரோடு - பழனி; சென்னை - புதுச்சேரி - கடலுார்; காட்பாடி - விழுப்புரம்; ராமேஸ்வரம் - தனுஷ்கோடி; ஈரோடு - கரூர் உள்ளிட்ட ரயில் பாதைகளுக்கு ஒதுக்கிய, 700 கோடி ரூபாயை, 'சரண்டர்' செய்வதாக, அவர் கடிதத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக, நம் நாளிதழில் கடந்த 1ம் தேதி செய்தி வெளியானது. இதற்கு தெற்கு ரயில்வே ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த நிலையில், ரயில்வே வாரியமும் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தெற்கு ரயில்வேயில், தமிழகம் மற்றும் கேரளாவில் நடக்கும் சில ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாக, சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அனுப்பியிருந்த ஒரு வழக்கமான கடிதத்தில், தற்போதைய காலாண்டில் பயன்படுத்த முடியாத சில திட்டங்களுக்கான நிதி, அடுத்த காலாண்டுகளில் பயன்படுத்தப்படும் வகையில் பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை சில ஊடகங்கள் தவறாக புரிந்து செய்தி வெளியிட்டுள்ளன. 2025- - 26ம் நிதி ஆண்டுக்காக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், எந்தவித மாற்றமும் இல்லை என, ரயில்வே அமைச்சகம் தெளிவாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை, அதற்கே செலவிடப்பட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வேக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.