சி.பி.ஐ., மீது ராஜா புகார்
புதுடில்லி:'என்னிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக, கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததன் மூலம், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் செயல்பட்டுள்ளது' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையின் போது, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ராஜா தரப்பில், மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி வாதாடினர். அவர் கூறியதாவது:என் (ராஜா) விவகாரத்தில், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் செயல்படுகிறது. கடந்த 14ம் தேதி, கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, இரண்டு குற்றப்பத்திரிகைகள் தொடர்பான விவகாரத்தில், என்னிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது என, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், கடந்த 18ம் தேதி, லூப் டெலிகாம் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து, என்னிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. என்னிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக கூறிவிட்டு, மீண்டும் என்னிடம் விசாரணை நடத்தியது ஏன்?இதுபோன்ற தவறான தகவல்களை அளித்ததன் மூலம், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் நடந்து கொள்கிறது.இவ்வாறு ராஜாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறினார்.