காணாமல் போன மாலுமியை கண்டுபிடிக்க கோரிக்கை
சென்னை : ''இந்திய மாலுமி விவேக்கின் இருப்பிடத்தை கண்டறிய, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, இந்திய மாலுமிகள் சங்க துணைத் தலைவர் நரேந்திர ராவ் கோரிக்கை விடுத்தார். சென்னையில் நேற்று, அவர் அளித்த பேட்டி: விழுப்புரத்தை சேர்ந்த மாலுமி விவேக், 'ஹெர்ம்ஸ் ஷிப் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் வாயிலாக, வணிகக் கப்பலான எம்.வி.பெர்சிஸ்டென்சியில் பணிக்கு சேர்ந்தார். மார்ச் 27ம் தேதி வரை, தனது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். அதன்பின், மொபைல் போன் செயல்படவில்லை. கடந்த மே 6ம் தேதி பணியை முடித்து, கப்பலில் இருந்து விவேக் இறங்கி விட்டதாக, அவரது குடும்பத்தினரிடம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மே 7 அன்று, தோஹா -- மஸ்கட்; மே 8ல், மஸ்கட் -- மும்பை விமானங்களில் செல்லும் வகையில், இ- - டிக்கெட் வழங்கியுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த பயணத் திட்டப்படி விவேக் விமானங்களில் பயணித்தாரா; இந்தியா வந்து சேர்ந்தாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை, கப்பல் நிறுவனம் வழங்க மறுக்கிறது. இரண்டு மாதங்களாகியும் மாலுமி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், கப்பல் துறை அதிகாரிகள், முதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளோம். விழுப்புரம் மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு, மாலுமியை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, விவேக்கின் மனைவி சினேகா, இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச்செயலர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.