உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்; வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்; வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

சென்னை: வாரிசு சான்றிதழ் வழங்க மூதாட்டியிடம் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், வருவாய் ஆய்வாளருக்கு, நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 60. இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்., 24ல், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.அங்கு பணியில் இருந்த வருவாய் ஆய்வாளர் ஹரிஹரன், 43, என்பவர், சான்றிதழ் வழங்க லஞ்சமாக, 30,000 ரூபாய் கேட்டுள்ளார். பின், லஞ்ச பணத்தை, 25 ஆயிரம் ரூபாயாக குறைத்து கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணவேணி, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்சப் பணத்தை பெற்ற ஹரிஹரனை, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். பின், ஹரிஹரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன் முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:ஹரிஹரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, அரசு ஊழியரான அவர், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முறைகேடான வழியில் பணம் ஈட்டிய குற்றச்சாட்டில், அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், கடமையை செய்ய லஞ்சம் கோரும் குற்றச்சாட்டில், மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

visu
டிச 31, 2025 21:30

அப்படியே தண்டனையை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்துவிட்டால் லஞ்சம் வாங்கிய காசில் வழக்கை சாகும்வரை நீட்டித்து விடலாம்


Rameshmoorthy
டிச 31, 2025 19:19

Great and he should be terminated from the job. Corruption is prevalent in all government offices and law should be changed to terminate staff those who indulge into corruption