வெறுப்பு அரசியலுக்கு வேர் திராவிட இயக்கங்கள்: பா.ஜ.,
சென்னை:''திராவிட கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள் கிடையாது. வெறுப்பு அரசியலுக்கு வேர், திராவிட இயக்கங்கள் தான்,'' என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.அவர் அளித்த பேட்டி:உலகமே வியக்கும் வகையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஹிந்து மக்களையும், நம் பாரத நாட்டையும் நேசிக்கக்கூடிய ஒருவர். அவர் மீண்டும் வென்று வந்துள்ளதால், இந்திய- - அமெரிக்க உறவு மட்டுமின்றி, வர்த்தகமும் பெருகும். மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச துரோகிகள். இவர்களை போன்றவர்களை, அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும். 'அமரன்' திரைப்படத்தை எதிர்ப்பதாக கூறி, தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நம் நாட்டை நேசிப்பவர்கள் இவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும். திராவிட கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் கிடையாது; இவர்கள் ஜாதி, மொழி வெறியர்கள். வெறுப்பு அரசியலுக்கு வேர் திராவிட இயக்கங்கள் தான். ஜாதி வெறுப்பு, மொழி வெறுப்பு, தேச வெறுப்பு திராவிடத்துக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.