மீனவர்களுக்கு நிவாரணம் தர ரூ.115 கோடி ஒதுக்கீடு பயனாளிகள் எண்ணிக்கை 16,000 அதிகரிப்பு
சென்னை:'மீன்பிடி குறைவு கால நிவாரண திட்டத்தின் கீழ், 1.91 லட்சம் பயனாளிகளுக்கு, தலா 6,000 ரூபாய் வழங்க, 115 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தமிழக அரசு சார்பில், மீன்பிடி குறைவு கால திட்டத்தின் கீழ், மீன்பிடி குறைவு காலத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள, 14 கடலோர மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 1.91 லட்சம் மீனவர்களின் குடும்பத்திற்கு, தலா 6,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு, 115 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. கடந்த ஆண்டில், 1.75 லட்சம் பயனாளிகளுக்கு, 105 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இம்முறை கடந்த ஆண்டை விட 16,000 பேருக்கு கூடுதலாக, நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இத்தொகை, அடுத்த வாரம் முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த ஆண்டு, புதிதாக திருமணமானோர், இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர். கடந்த முறை விண்ணப்பித்து, உரிய ஆவணங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டவர்கள், தற்போது உரிய சான்றிதழ் அளித்து, பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு பயனாளிகள் எண்ணிக்கை 16,000 அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.