ரூ.350 கோடி மதிப்பு!
– நமது நிருபர் – வடசென்னையில், 350 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘ஹெராயின்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சல்லடை போட்டு நடத்திய சோதனையில், போதைப் பொருளை இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைத்திருந்த இருவரை கைது செய்தனர். நம் அண்டை நாடான இலங்கைக்கு, போதைப் பொருள் கடத்தும் மையமாக தமிழகம் மாறிவிட்டது. சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, விமானம் மற்றும் ரயில் மார்க்கமாக ஹெராயின், மெத் ஆம் பெட்டமைன் உள்ளிட்ட ‘சிந்தட்டிக்’ எனும் விலை உயர்ந்த போதைப் பொருளை, தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர். இஇ
இவர்களின் ‘நெட் ஒர்க்’கை துண்டிக்கும் பணியில், என்.சி.பி., எனும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தமிழக போதைப் பொருள் தடுப்பு போலீசார், மத்திய நிதித் துறையின் கீழ் செயல்படும், டி.ஆர்.ஐ., எனும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக, தொடர் கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, சென்னை மாதவரம் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கோடி ரூபாய் மதிப்புள்ள, 71.24 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்து, சென்னை மாதவரம் பகுதியில் ரகசிய விசாரணை மேற்கொண்டோம். அப்போது, இரு சக்கர வாகனத்துடன் பொருத்தப்பட்ட ஐஸ் பெட்டியில், ‘ஐஸ் கிரீம்’ விற்பது போல் மர்ம நபர் ஒருவர் சென்றார். அவரது செயல்பாடு, எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இஇ
அவர், தனக்கு முன் சென்ற காரை, பின் தொடர்ந்து சென்றார். அந்த காரை ஓட்டிச் சென்ற நபர், ஏற்கனவே எங்களிடம் இருந்த, சந்தேக பட்டியலில் இடம் பெற்றிருந்த நபர் போல் தெரிந்தது. உடனடியாக அந்த காரையும், இரு சக்கர வாகனத்தையும் மடக்கி சோதனை செய்தோம். அப்போது, ஐஸ் கிரீம் பெட்டியின் அடிப்பகுதியில் இருந்த ரகசிய அறையில், 69 பொட்டலங்களாக, 71.24 கிலோ ஹெராயின் இருப்பதைக் கண்டோம். வாகனத்தை ஓட்டி வந்த, தென் மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ஷீக்கர், 32, ஷபீக் அகமது, 30, ஆகியோரை கைது செய்தோம். அவர்களுக்கு, சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய போதைப் பொருள் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பது, முதல்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. இவர்கள், போதைப் பொருளை இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் தொடர்பிலிருப்போர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னைக்கு எப்படி வந்தது?
வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு விமானம் அல்லது கடல் வழியாக கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.எனவே, அதிகாரிகள் இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருள், தற்போது சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஹெராயின் ஆகியவை, ஒரே மாதிரியான சர்வதேச கடத்தல் வலையமைப்பின் தொடர்ச்சியா என, அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அதிரடி காட்டும் டி.ஆர்.ஐ., அதிகாரிகள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மாதம், டி.ஆர்.ஐ., எனும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, 137 கிலோ மெத் ஆம் பெட்டமைன் எனும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, த.வெ.க., நிர்வாகி பூபாலன், 42, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். தற்போது, வடசென்னை பகுதியில், மிகப்பெரிய அளவிலான ஹெராயின் போதைப் பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர்.