UPDATED : ஜூன் 01, 2025 05:22 AM | ADDED : ஜூன் 01, 2025 05:21 AM
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 4.60 லட்சம் பேரிடம், 7.97 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:புகையில்லா தமிழகம் உருவாக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குழந்தைகள், சிறார்களை குறிவைத்து, புகையிலை பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.புகையிலை பொருட்களை குழந்தைகளுக்கு விற்பனை செய்தல், பொது இடங்களில் புகை பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோரிடம், 200 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில், 4.60 லட்சம் பேரிடமிருந்து, 7.97 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.வரும் காலங்களில், இச்சட்டத்தின்படி நடவடிக்கையை தீவிரப்படுத்த ஆலோசித்து வருகிறோம். அதன்படி, தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது, குற்றவியல் வழக்குப்பதிவு செய்து, ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.