ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு மறுத்து பாசிச முகத்தை காட்டுகிறது தி.மு.க.,
சென்னை: 'நுாற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது, தி.மு.க., அரசின் பாசிச முகத்தைக் காட்டுகிறது' என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு என்பது சீருடை அணிந்து, ராணுவம் போல கட்டுப்பாட்டுடன் நடக்கும். இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புகள் அனைத்தும் மிகவும் அமைதியுடன் நடந்திருக்கின்றன. பாசிச தன்மை
காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கும் கேரளா உட்பட அனைத்து மாநிலங்களிலும் எந்த பிரச்னையும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. இது, தி.மு.க., அரசின் பாசிச தன்மையையே காட்டுகிறது. அடிப்படை உரிமை
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அணிவகுப்பு, பேரணி நடத்த அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்று ஒரு பக்கம் முழங்கிக் கொண்டே, மறுபக்கம் அந்த சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கிறது பாசிச தி.மு.க., அரசு. இந்தாண்டு ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா ஆண்டு. உலக வரலாற்றில் துவங்கிய நாளில் இருந்து, எந்த பிளவையும் சந்திக்காமல் தொடர்ந்து, 100 ஆண்டுகள் மக்களின் நன்மதிப்பை பெற்று வெற்றிகரமாக செயல்படும் இயக்கம் இது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருந்தவர்கள். அந்த அமைப்பால் ஊக்கம் பெற்று, இந்த நிலையை அடைந்தவர்கள்.நாட்டை வழி நடத்தியவர்களும், தற்போது வழி நடத்துபவர்களும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் வளர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது, குறுகிய எண்ணத்துடன் இயக்கத்தின் அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, அக்., 6ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், இதில் தலையிட்டு அனுமதி அளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.