சென்னை: கரியமில வாயு உமிழ்வு, புவி வெப்பமாதல் உள்ளிட்ட காரணங்களால் கடல் மட்டம் உயர்வதால், சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.சென்னை அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது: பனி பாறைகள் உருகுவது, புவி வெப்பமாதல் காரணமாக கடலின் நீர் மட்டம் உயரும். கடந்த 1991ம் ஆண்டு இருந்த கடல் மட்ட உயரத்தை அடிப்படையாக வைத்து, கடல் மட்டம் உயர்வது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் பகுதி வாரியாக திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், நம் நாட்டில் ஆண்டுக்கு, 3.4 மி.மீ., அளவுக்கு கடல் மட்ட உயர்வு இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுதும் ஒன்பது மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில், 69 மாவட்டங்களில் கடல் மட்ட உயர்வு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.குறிப்பாக, 1991 - 2023 வரை கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்ற விபரங்கள், செயற்கைக்கோள் வாயிலாக திரட்டப்பட்டன. இத்துடன், 1991 - 2023 வரையிலான காலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிபரங்கள் அடிப்படையிலும் கடல் மட்ட உயர்வு விகிதங்கள் மதிப்பிடப்பட்டு உள்ளன. இதன்படி, ஆண்டுக்கு 3.4 மி.மீ., என்று கணக்கிட்டால், 2100ம் ஆண்டில், 25 செ.மீ., அளவுக்கு தான் கடல் மட்ட உயர்வு இருக்கும். கரியமில வாயு உமிழ்வு படிப்படியாக அதிகரித்தால், வெப்பநிலை அதிகரித்து, அதன் காரணமாக கடல் மட்ட உயர்வு அதிகபட்சமாக, 2100ம் ஆண்டில் 110 செ.மீ., வரை செல்ல வாய்ப்புள்ளது.இதில், தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், ஆந்திராவில் நெல்லுார், மேற்கு வங்கத்தில் சுந்தர்பன், கேரளாவில் திருச்சூர், மஹாராஷ்டிராவில் ராய்காட், குஜராத் மாநிலம் கட்ச் ஆகிய நகரங்கள், கடல் மட்ட உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என தெரிய வருகிறது. தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலுார், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களில், கடல் மட்ட உயர்வால் பருவ மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படும். இதில் கடல் நீர் ஊருக்குள் வருவதை விட, நிலப் பகுதியில் இருந்து வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படும். இதனால், தாழ்வான பகுதிகள் தொடர்ந்து பல நாட்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.நாடு முழுதும் கடல் மட்டம் உயரும் வாய்ப்புள்ள 69 மாவட்டங்கள் குறித்த தர வரிசை பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 14 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.சென்னையில் கூவம், அடையாறு முகத்துவார பகுதிகள், முட்டுக்காடு, பழவேற்காடு ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் கடல் மட்ட உயர்வின் தாக்கம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கரியமில வாயு உமிழ்வு அதிகரிப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களின் அர்ப்பணிப்புடன், அவர்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.