சென்னை: பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி வரை, பல துறைகளைச் சேர்ந்த 10,000த்திற்கும் மேற்பட்டோர், 'சாகர் கவச்' எனும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2008ல் கடல் வழியாக, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்குள் ஊடுருவிய லஷ்கர் - இ - தொய்பாவைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம் என பல இடங்களில் தாக்குதல் நடத்தி, 166 பேரை கொன்றனர். இச்சம்பவத்திற்கு பின், கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஆண்டுக்கு இரண்டு முறை நாடு முழுதும் கடல் கவசம் எனும், 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. இதில், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, சுங்கத் துறை, மீன்வளத் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய - மாநில உளவுத் துறையினர் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 10,000த்திற்கும் மேற்பட்டோருடன், சென்னை - கன்னியாகுமரி வரை, கடலோரப் பகுதிகள் முழுதும் சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய் குமார் தலைமையிலான போலீசார், இந்நடவடிக்கையை ஒருங்கிணைத்துள்ளனர். இந்த ஒத்திகை இன்று மாலை 6:00 மணிக்கு நிறைவடையும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.