சென்னை: போக்குவரத்து துறை பணி நியமன மோசடி புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மேலும், 150 பேருக்கு, 'சம்மன்' அனுப்ப, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 2011 - -15ல், போக்குவரத்து துறையில் பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.மொத்தமுள்ள நான்கு வழக்குகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மூன்று வழக்குகளிலும், முதல் நபராக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கில், எம்.பி., - எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்; அதில், 2,100க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.இவர்களுக்கு ஒவ்வொரு விசாரணையின் போதும், 100 பேர், 150 பேர் என, மொத்தமாக ஆஜராகும் வகையில், சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அதேபோல, ஏற்கனவே சம்மன் பெற்ற, 145 பேர் ஆஜராகினர்.இதையடுத்து, இவ்வழக்கில் மேலும், 150 பேருக்கும், சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி, 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். மேலும், ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்டோர் ஆஜராகுவதால், நீதிமன்ற வளாகத்தில் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை தவிர்த்து, ஏற்கனவே ஆஜரான 149 பேர், அடுத்த விசாரணையின் போது ஆஜராக விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார்.
'தீவுத்திடலில் கேம்ப் கோர்ட்'
குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒரு சிலர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி முறையீடு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:வழக்கில் 2,000த்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட என் கட்சிக்காரர்களையும், போலீசார் குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர். குற்ற வழக்கை பொறுத்தமட்டில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து விசாரிக்க வேண்டும். அப்போது தான் நீதிமன்ற விசாரணை, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தெரியவரும்.அதற்கு வசதியாக, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரு சேர ஆஜராகும் வகையில், வழக்கின் விசாரணையை விசாலமான இடத்துக்கு மாற்ற வேண்டும். நேரு விளையாட்டு மைதானம் அல்லது தீவுத்திடல் போன்ற இடங்களில், 'கேம்ப் கோர்ட்' அமைத்து, விசாரணையை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அதற்கு நீதிபதி, 'கூடுதல் ஊழியர் உள்ளிட்ட பிற வசதிகள் கோரப்பட்டு உள்ளன. தற்போது இருக்கும் வசதிகளை வைத்து, வழக்கு விசாரணை தடையின்றி நடத்தப்படும். குற்றச்சாட்டு பதிவு போன்ற முக்கியமான கட்டங்களில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் ஆஜராகுவர். ஒவ்வொரு விசாரணையின் போதும், அனைவரும் ஆஜராகுவதில் சற்று சிரமம் உள்ளது. இருப்பினும், அது குறித்து வழக்கின் அடுத்தகட்ட நகர்வின் போது முடிவு செய்யப்படும்' என்றார்.