சென்னை: ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை போல, எஸ்.ஐ.ஆர்., முகாம் நடத்த, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக, இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் நீக்கப்பட்டு, முழுமையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; டிசம்பர் 4 வரை நடக்க உள்ளது. இதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தால் அச்சிடப்பட்ட வாக்காளர் விபர படிவத்தை வீடு வீடாக சென்று, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வினியோகம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 6.12 கோடி வாக்காளர்களிடம் படிவங்கள் நேரடியாக வழங்கப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட 1.84 கோடி படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை காட்டிலும், படிவம் வினியோகம் மற்றும் திரும்ப பெறுவதில் தமிழகம் பின்தங்கியுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்வதிலும், முகவரி மாறியவர்களை கண்டறிவதிலும் உள்ள பிரச்னைகள், இதற்கு காரணமாக அமைந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர்களுக்கு உதவும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்றும், நாளையும், எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக, தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடத்தப்படுவது வழக்கம். அதே பாணியில், எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்களும் நடத்தப்பட வேண்டும். சென்னையில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாரம் முழுதும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், வார விடுமுறை நாட்களில், எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்களை அரசு நடத்த வேண்டும். இதற்கான உத்தரவை, கலெக்டர்கள் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.