உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கறுப்பு பணம் தொடர்பான எஸ்.ஐ.டி., நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல் முறையீடு

கறுப்பு பணம் தொடர்பான எஸ்.ஐ.டி., நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல் முறையீடு

புதுடில்லி : 'கறுப்பு பணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்ததை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த உத்தரவு, அரசின் நடவடிக்கையில் நீதித் துறை தலையிடுவது போல் உள்ளது' என குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில், இந்தியர்களால் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பவும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை, கடந்த 4ம் தேதி நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிச்சார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசு தவறிவிட்டது.

கறுப்பு பணம் பதுக்கல் தொடர்பான விசாரணையை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து, இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. இந்த புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஷா செயல்படுவார்.

'கறுப்பு பணம் பதுக்கலை கண்டுபிடிப்பதற்காக, மத்திய அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் கமிட்டியானது, புலனாய்வுக் குழுவின் கீழ் செயல்படும். இந்த புலனாய்வுக் குழு, கோர்ட்டுக்கு நேரடியாக அறிக்கைகளை அளிக்கலாம்' என குறிப்பிட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு நேற்று, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவில், 'கறுப்பு பணம் பதுக்கலை கண்டுபிடிக்க, மத்திய அரசால் ஏற்கனவே உயர்மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அதிகாரத்திற்கு மேம்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த உத்தரவு, அரசின் நடவடிக்கையில் நீதித் துறை தலையிடுவது போல் உள்ளது. எனவே, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.

ரகசிய ஆலோசனை: மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது குறித்து முன்னதாக, நிதி மற்றும் சட்டத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து இரண்டொரு நாளில் முடிவு செய்யப்படும் என, முன்னதாக நிதி அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று, மத்திய அரசு இந்த அதிரடி முடிவை எடுத்தது. இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை நேற்று மத்திய அரசு ஏற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை