அரசு ஊழியர்களுக்கான சம்பள பில் சிக்கலுக்கு தீர்வு
- நமது நிருபர் -: அரசு ஊழியர்கள் சம்பள விபரங்களை, ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மை அமைப்பான ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மூலம், ஆன்லைனில் சமர்ப்பித்து வருகின்றனர். இந்த மாத சம்பளத்தில், அகவிலைப்படி, 3 சதவீத உயர்வுக்கு, நான்கு மாத நிலுவை தொகையும் சேர்த்து கணக்கிடப்பட்டது. இந்த கணக்கீட்டு முறையில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு முன், ஈட்டிய விடுப்பு சரண், அகவிலைப்படி நிலுவை தொகை கணக்கிடுவதில் சிக்கல்கள் எழுந்தால், அதை ஊழியர்களே திருத்தம் செய்யும் வாய்ப்பு தரப்பட்டிருந்தது. இந்த முறை 'ஆட்டோமேட்டிக்' வாய்ப்பு வழங்கப்பட்டதால், சம்பள பில்லை கருவூலகங்களுக்கு சமர்ப்பிக்கும்போது, சிக்கல் ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, 'நம் நாளிதழில்' நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, அகவிலைப்படி நிலுவை தொகை, கணக்கிடுவதில் ஏற்பட்ட இடர்பாடுகள் சரிசெய்யப்பட்டன.