உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை சட்டசபை தேர்தலுக்கு பின் மேற்கொள்ளணும்: குறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனில் தி.மு.க., முறையீடு

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை சட்டசபை தேர்தலுக்கு பின் மேற்கொள்ளணும்: குறைகளை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனில் தி.மு.க., முறையீடு

சென்னை: 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, முறையாக நடத்தி முடிக்க, குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும். எனவே, 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், இப்பணியை மேற்கொள்ள வேண்டும்' என, தேர்தல் கமிஷனிடம் தி.மு.க., முறையிட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு, தி.மு.க., அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல், 100 சதவீதம் முழுமையாக இருக்க வேண்டும் என, தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. துரதிர்ஷ்டம் ஆனால், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியால், அதன் நோக்கம் நிறைவேறாது என்பது துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில், இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கணக்கெடுப்பு படிவத்தில், வாக்காளர் புகைப்படங்களை ஒட்டுவது கட்டாயமா; பெற்றோர் வீடு அமைந்துள்ள தொகுதியில், வாக்காளராக இருந்த பெண், புது வீட்டின் தொகுதியில், வாக்காளராக மாறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து தெளிவு படுத்தவில்லை. கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி அலுவலரிடம் இல்லை. சாதாரண குடிமகனால், இந்த பட்டியலை எப்படி சரிபார்க்க முடியும். கணக்கெடுப்பு பணியின்போது, புதிய வாக்காளர்களை சேர்க்க, குறைந்தபட்சம் 30 படிவங்களையாவது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களிடம் எந்த படிவமும் இல்லை. கணக்கெடுப்பு படிவம் முடிந்த, மூன்று நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. மூன்று நாட்களில் கணக்கெடுப்பு படிவங்களை கணினிமயமாக்கும் போது, அவற்றை தவறவிடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், பல வாக்காளர்கள் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாத நிலை ஏற்படும். நீக்கப்படுவர் நேரமின்மை, நடைமுறை குறைபாடுகள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி இல்லாதது போன்ற குறைபாடுகளுடன், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மேற்கொண்டால், ஏராளமான தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்படுவர். எனவே, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்பணியை முடிக்க, குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும். எனவே, 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'எதிர்க்கட்சி வேலையை நாங்கள் செய்கிறோம்'

இந்திய தேர்தல் கமிஷனுக்கு, தி.மு.க., தலைமை அனுப்பியுள்ள கடித நகலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வழங்கினார். அதன்பின், ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: வாக்காளர் கணக்கெடுப்புக்காக, சில இடங்களில் இரண்டு படிவங்களையும், சில இடங்களில் ஒரு படிவத்தையும் வழங்குகின்றனர். இதற்கான காரணம், அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை. கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறுவரையை செய்யப்பட்டது. அதன்பின், பல தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த குழப்பங்களை எடுத்துக் கூறியுள்ளோம். எதிர்க்கட்சிதான் இதுபோன்ற விஷயங்களை எடுத்து சொல்ல வேண்டும். ஆனால், ஆளும் கட்சியான நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க., மனு அளித்துள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
நவ 11, 2025 08:03

கணக்கெடுப்பு நடந்து முடிந்தபின்பே தேர்தல் நடத்தலாம். அதுவரை ப்ரெசிடெண்ட் ரூல் கொண்டுவரலாம். பாரதிக்கு எப்படி சௌரியப்படும்ம்னு அவர்தான் சொல்லணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை