உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மணல் எடுக்க அனுமதிப்பதில் கெடுபிடி: செங்கல் விலை கிடுகிடு உயர்வு

 மணல் எடுக்க அனுமதிப்பதில் கெடுபிடி: செங்கல் விலை கிடுகிடு உயர்வு

சென்னை: மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில், தமிழக அரசு அதிகபட்ச கெடுபடி காட்டுவதால், செங்கல் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக, கட்டுமானத்துறையினர் தெரிவித்தனர். தனியார் பட்டா நிலங்களில், 2 மீட்டர் அதாவது, 6 அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்படும். இதில், 11 மாதங்கள் வரை அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த, 2021ல், 11 மாத அனுமதி காலத்தை, மூன்று மாதங்களாக குறைத்து, அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், செங்கல் உற்பத்தியாளர்கள் மனு செய்தால், கனிமவளத் துறை துணை அல்லது உதவி இயக்குநர்கள் இதற்கான அனுமதி வழங்கலாம் என, அரசு அறிவித்தது. ஆனால், செங்கல் தயாரிப்புக்கான மண் எடுப்பதற்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என, நீதிமன்ற உத்தரவு வந்ததால், இந்த அனுமதியை பெறுவது பிரச்னையானது. இதனால், செங்கல் தயாரிப்புக்கு தேவையான மணல் எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து, செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மூன்று மாதங்கள் வரை அனுமதி அளிக்கும் நடைமுறையை பயன்படுத்தி வந்தோம். இதில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம் என, புதிய கட்டுப்பாடு வந்ததால், இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்தால், சுற்றுச்சூழல் அனுமதி பெற, ஓராண்டு வரை ஆகிறது. ஓராண்டு காலம் போராடி அனுமதி பெற்றால், மூன்று மாதங்களுக்கு மட்டுமே அனுமதி என்றால், என்ன செய்வது? இதனால், மூன்று மாத அனுமதி பெறுவதும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக செங்கல் விலை, ஒரு கல், 7 ரூபாயில் இருந்து, 12 ரூபா யாக உயர்ந்துள்ளது. அரசின் தெளிவற்ற கட்டுப்பாடு கார ணமாக, செங்கல் உற்பத்தி குறைந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: கட்டுமான துறையில், 'ஹாலோ பிளாக், சாலிட் பிளாக்' மற்றும் எரிசாம்பல் கற்கள் என, பல்வேறு புதிய பொருட்கள் வந்து விட்டன. இருப்பினும், தனி வீடு மற்றும் சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர், செங்கற்களையே நம்பி உள்ளனர். அதிக உயரமான கட்டடங்கள் கட்டுவோர் மட்டுமே, புதிய பொருட்களை நாடுகின்றனர். இன்றைக்கும் செங்கலுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அரசின் கட்டுப்பாடு காரணமாக, முறையான அனுமதி இன்றி மண் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விதிமீறல்களை தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை