வலுவாக வீசுது பருவக்காற்று: வரும் 23 வரை மிதமான மழை
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2வது வாரத்தில் துவங்கும் வடகிழக்கு பருவமழை, ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் விலகுவது வழக்கம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் அளவுக்கு ஜனவரியில் கனமழை பெய்யாது. கடந்த, அக்., 15ல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. அக்., நவ., டிச., மாதங்களில் இயல்பை விட, அதிக மழை பெய்தது. ஜன., 16 வரை வடகிழக்கு பருவக்காற்று தொடரக்கூடும் என்றாலும், இந்த ஓரிரு வாரங்களில் பெய்யும் மழை, குளிர்கால மழையாகவே கணக்கில் கொள்ளப்படும். நடப்பு ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, ஜனவரி மாதத்தில், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது. 54 சதவீதம் அதிகம்
ஜனவரி, 1 முதல், 19 வரையிலான கால கட்டத்தில், தமிழகத்தில் பெய்யக்கூடிய வழக்கமான சராசரி மழை அளவு, 1 செ.மீ., ஆனால், தற்போது, 1.54 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பை விட, 54 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. தற்போது, வடகிழக்கு பருவக்காற்று வலுவாக வீசுவதால், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்வதாக வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மாவட்டங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி, 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.