கொலை வழக்கில் கைதான மாணவர்கள் மருத்துவமனையில் பணிபுரிய உத்தரவு
சென்னை, டிச. 3--சென்னையில் மாநில கல்லுாரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், கைதான பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. மாணவர்கள் நால்வரும் மறு உத்தரவு வரும் வரை, ராஜிவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிய வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் சுந்தர்; சென்னை மாநில கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த மாதம் 4ம் தேதி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 9ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேரை கைது செய்த பெரியமேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர்.இவர்களில், ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தள்ளிவைப்பு
மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, நான்கு மாணவர்களுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கினார். 'சென்னை ராஜிவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மாணவர்கள் பணிபுரிய வேண்டும். 'மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:00 மணிக்கு, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில், 'டீன்' முன் ஆஜராகி, பிற்பகல் 2:00 மணி வரை பணிபுரிய வேண்டும்' என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம், பச்சையப்பன் மற்றும் மாநில கல்லுாரி முதல்வர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.