தஞ்சாவூர்: இலங்கையில் புதிதாக கட்டப்பட்டு வரும் காமாட்சியம்மன் கோவிலுக்கு, ஐம்பொன் சுவாமி விக்ரகங்கள், மணி, கலசங்கள், திம்மக்குடியைச் சேர்ந்த ஸ்தபதியால் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகே திம்மக்குடியைச் சேர்ந்தவர் வரதராஜன், 39; ஸ்தபதி. இவர், இலங்கை, மட்டக்களப்பில் கட்டப்பட்டு வரும், காமாட்சியம்மன் கோவிலுக்கு தேவையான ஐம்பொன் சுவாமி விக்ரகங்களை இரண்டு ஆண்டுகளாக தயாரித்துள்ளார்.முதற்கட்டமாக, 1,000 கிலோ எடையிலான, 100 கோபுர கலசங்கள், நான்கு மணிகளை உருவாக்கி, இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கைக்கு அனுப்பினார்.மேலும், 2 முதல் 3.5 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், நடராஜர், சிவகாமி, வராகி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி, விஷ்ணு துர்க்கை, மாணிக்கவாசகர், கருடன், ஆஞ்சநேயர், மாங்காடு காமாட்சி அம்மன், அஷ்டலட்சுமிகள் என, 2,400 கிலோ எடையில், 28 ஐம்பொன் சுவாமி விக்ரகங்களை தயார் செய்து, இந்த வாரத்திற்குள்ளாக, கப்பலில் இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.வரதராஜன் கூறியதாவது:நான், 25 ஆண்டுகளாக, ஐம்பொன் சுவாமி விக்ரகங்களை தயாரிக்கும் கூடம் வைத்து, தயார் செய்து வருகிறேன். 2022ம் ஆண்டு, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 15,000 கிலோ எடையில், 23 அடி உயரம், 17 அடி அகலம் கொண்ட நடராஜர் சிலையை உருவாக்கினேன்.நம் நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும், சுவாமிமலை ஐம்பொன் விக்ரகங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான உதவிகளை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. சுவாமிமலையில் இருந்து இலங்கைக்கு நான் உருவாக்கிய ஐம்பொன் சுவாமி விக்ரகங்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.